ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவிக்கு நெல்லையில் தேர்வு மையம்! இந்த ஆண்டும் நீட் குளறுபடி! கதறும் பெற்றோர்!

நாடு முழுவதும் மே 5-ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டில் குளறுபடி உள்ளதாகவும், தேர்வு மையம் அமைந்திருக்கும் ஊரின் எண் வேறாகவும், தேர்வு மையம் வேறு ஊரிலும் உள்ளதாகவும் தேர்வர்கள் புகார் தெரிவிக்கின்றனர்


மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வான நீட் தேர்வுக்கு, ஹால் டிக்கெட் கடந்த ஏப்ரல் 15-ல் வெளியானது. தமிழகத்தைச் சேர்ந்த 1.40 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்து ஹால் டிக்கெட் பெற்றுள்ளனர். நீட் தேர்வுக்கு வெளியான ஹால் டிக்கெட்டில் தேர்வு எழுதும் மையம் மற்றும் ஊரின் பெயர்கள் வெவ்வேறாக அமைந்துள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நீட் தேர்வுக்கு வெளியான ஹால் டிக்கெட்டில் Area Code என்ற தேர்வு மையம் அமைந்திருக்கும் ஊர் வேறாகவும், தேர்வு மையம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பள்ளி மற்றும் கல்லூரியின் பெயர் வேறு ஊரிலும் உள்ளதால் தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து ஹால் டிக்கெட் பெற்றுள்ள ஒருவருக்கு , அவரது ஹால் டிக்கெட்டில் அவருக்கான Area Code மதுரையிலும், தேர்வு எழுதும் மையம் திருநெல்வேலியிலும் ஒதுக்கப்பட்டுள்ளது

மதுரை நகரில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் , பயிற்சி பெற்று வரும் 300 மாணவர்களின் ஹால் டிக்கெட்டிலும் தேர்வு மையத்தின் ஊர் எண் வேறு ஊரிலும், தேர்வு மையம் அமைந்திருக்கும் ஊர் வேறாகவும் உள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

திருநெல்வேலி, திருப்பூர், பெரம்பலூர், கோவை, புதுக்கோட்டை என்று தமிழகம் முழுவதும் பல ஆயிரம் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டில் தேர்வு மையம் அமைந்திருக்கும் ஊரின் எண் வேறாகவும், தேர்வு மையம் வேறு ஊரிலும் உள்ளதால் அம்மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்

ஹால் டிக்கெட்டில் எழுந்துள்ள குழப்பம் தொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் ( NTA ) உதவி எண்ணைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தேர்வர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். மேலும், NTA-இன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள E- Mail முகவரிக்கு ஹால் டிக்கெட்டில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பியும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்றும் தேர்வர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

NTA-வின் www.ntaneet.ac.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் மற்றும் உதவி எண்கள் செயல்படவில்லை என்றும் தேர்வர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். ஹால் டிக்கெட்டில் எழுந்துள்ள குழப்பம் தொடர்பாக விளக்கம் பெறவும், சந்தேகங்கள் தீர்க்கவும் தமிழக அரசின் சார்பில் உதவி எண்களோ அல்லது உதவி மையமோ அமைக்கப்படவில்லை என்றும், 

இக் குழப்பம் தொடர்பாக யாரை அணுகுவது , எங்கு அணுகுவது என்பது தெரியாததால் தமிழகத்தில் நீட் தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

Back ground : கடந்த ஆண்டு வரை நீட் தேர்வை CBSE நடத்தி வந்தது. CBSE நடத்திய நீட் தேர்வுகளில், வினாத்தாள் குளறுபடி, 

ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவருக்கு வேறு தொலைதூர மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கியது ; தேர்வறைக்குள் நுழைவதற்கு முன் நடத்தப்பட்ட பல்வேறு சர்ச்சையான சோதனைகள் என்று பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதையடுத்து நீட் தேர்வை நடத்தும் பொறுப்பு NTA எனப்படும் தேசிய தேர்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமையே நடத்துகிறது. நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, தேர்வுக்கட்டணம் செலுத்துதல், ஹால் டிக்கெட் என்று அனைத்து நிலைகளையும் தேசிய தேர்வு முகமையே மேற்கொண்டது.

வரும் மே 5-ம் தேதி நாடு முழுவதும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை 3 மணி நேர தேர்வாக நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு வெளியான ஹால் டிக்கெட்டில் தான் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், குழப்பம் தொடர்பான விளக்கம் பெற தேசிய தேர்வு முகமையை அணுக முடியவில்லை என்றும் தேர்வர்கள் தற்போது புகார் எழுப்பியுள்ளனர்.