மதப்பிரச்சாரம் செய்ய வந்தவர்களால் ஈரோட்டில் வேகமாக பரவும் கொரோனா..! இதுவரை 13 பேருக்கு உறுதியானது!

ஈரோட்டில் மேலும் எட்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.


தாய்லாந்தில் இருந்து மதப்பிரச்சாரம் மற்றும் மத போதனை செய்வதற்காக இந்த மாத துவக்கத்தில் தாய்லாந்தில் இருந்து ஒரு குழு ஈரோடு வந்தது. மதப்பிரச்சாரத்தை முடித்துவிட்டு அவர்கள் நாடு திரும்ப முயன்ற போது நடைபெற்ற சோதனையில் கொரோனா அறிகுறி இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பரிசோதனையில் முதலில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பின்னர் அவருடன் வந்த மேலும் மூன்று பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு ஈரோட்டில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த எட்டு பேருமே தாய்லாந்தில் இருந்து மதப்பிரச்சாரத்திற்கு வந்த குழுவினருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்ட எட்டு பேரில் நான்கு பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதனை தொடர்ந்து எட்டு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தாய்லாந்து குழுவினர் மதபோதனைகளுக்கு சென்ற பள்ளிவாசல்கள், மசூதிகளில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களில் அங்கு சென்று வந்தவர்களை தனிமைப்படுத்தி அதிகாரிகள் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.