துரைமுருகனுக்கும், ஏ.சி.சண்முகத்துக்கும் மரண பயத்தைக் காட்டிய தேர்தல் அதிகாரி!

வேலூர் தொகுதிக்கு வேட்புமனு செய்தவர்கள் மனு மீது, இன்று இறுதிக்கட்ட பரிசீலனை நடத்தப்பட்டது.


இன்று காலையில் தொடங்கிய பரிசீலனையின்போது, துரைமுருகனுக்கும், ஏ.சி.சண்முகத்திற்கும் பெரும் டென்ஷனை உருவாக்கிவிட்டார் தேர்தல் அதிகாரி. புதிய நீதிக்கட்சி தலைவராக இருக்கும் ஏ.சி.சண்முகத்தால், எப்படி அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட முடியும் என்று கேள்வி எழுப்பி, அவர் மனு மீதான பரிசீலனையை நிறுத்திவைத்தார். அதற்காக அ.தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட படிவம் குறித்து அதிகாரி கண்டுகொள்ளவில்லை.

அதேபோன்று ஏற்கெனவே தேர்தல் அறிவிப்பு செய்தநேரத்தில் பணம் பிடிபட்ட விவகாரத்தில், கதிர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கிலிருந்து இன்னமும் கதிர் ஆனந்த் விடுபடவில்லை என்பதால், அவர் போட்டியிடக் கூடாது என்று சுயேட்சை வேட்பாளர் ஆட்சேபம் தெரிவித்தார்.

அதனால், கதிர் ஆனந்த் மனுவும் பரிசீலனை செய்வது நிறுத்தப்பட்டது. இந்த நிலையைக் கண்டதும் துரைமுருகன் டென்ஷன் ஆகிவிட்டார். சமீபத்தில்தான் அறுவை சிகிச்சை செய்து திரும்பியிருக்கிறார். அதனால் அவரை சமாதானப்படுத்திவந்தனர். அதேபோன்று ஏகப்பட்ட பணம் செலவழித்துவிட்ட ஏ.சி.சண்முகமும் ஏக டென்ஷன் ஆனார்.

ஆனால், அதன்பிறகு மீண்டும் அவர்கள் இருவருடைய மனுவும் பரிசீலனை செய்யப்பட்டது. அ.தி.மு.க. படிவம் சரியாக இருப்பதால் ஏ.சி.சண்முகம் மனு ஏற்கப்பட்டது. அதேபோன்று, வழக்கு இன்னமும் புகார் நிலையில் இருப்பதால் கதிர் ஆனந்த் மனுவும் ஏற்கப்பட்டது. கொஞ்சநேரத்தில மரண பயத்தைக் காட்டிட்டாங்கப்பா என்று ஏ.சி.சண்முகம் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு வெளியேறினார்.