ஏப்ரல் கடைசியில் நகராட்சிகளுக்கு தேர்தல் - அ.தி.மு.க. கூட்டத்தில் பழனி - பன்னீர் ஆலோசனை

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் கணிசமான இடங்களை அதிமுக பெற்றதை அடுத்து, நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த ஆளும்கட்சி தயாராகியுள்ளது.


சென்னையில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் வரும் ஏப்ரல் கடைசியில் நகராட்சித் தேர்தலை நடத்துவது எனும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிமன்றத்தில் முறையீடு, அதன் தீர்ப்பை அடுத்து, கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய நாள்களில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

அதில், 514 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களில் திமுக 244 இடங்களிலும் அதிமுக 211 இடங்களிலும் வென்றன. 5050 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களில் திமுக 2,082 இடங்களிலும் அதிமுக 1,773 இடங்களிலும் வெற்றிபெற்றன. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர் உள்பட்ட பதவிகளுக்கான தேர்தலில் ஆளும் கட்சியே அதிக இடங்களைப் பிடித்தது.

அரசுக்கு எதிராக அதிருப்தி நிலவுகிறது என எதிர்க்கட்சிகள் கூறிவந்த நிலையில், பாதிக்குப் பாதி வாக்குகளுக்குப் பக்கமாக கிடைத்ததும் ஆளும் கட்சி தரப்பு உற்சாகமடைந்தனர். சூட்டோடு சூடாக நகராட்சி, மாநகராட்சி தேர்தலையும் நடத்தவேண்டும் என ஆளும் தரப்பினர் தீர்மானித்தனர். அதற்கு முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பல இடங்களில் நலத்திட்டங்கள், புதிய திட்டத் தொடக்கவிழா போன்றவற்றை நடத்தி மக்கள் ஆதரவைப் பெறும் முயற்சியில் அ.தி.மு.க. ஈடுபட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளாக காவிரிப் படுகை மாவட்டங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள மீத்தேன்- ஐட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதில்லை எனும் முதலமைச்சரின் நேற்றைய அறிவிப்பு, பரவலாக வரவேற்பையும் பெற்றுள்ளது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில்தான் இன்று அதிமுகவின் தலைமைக்கழகத்தில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை இடம்பெற்றுள்ளது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள், உள்கட்சிப் பஞ்சாயத்துகள் குறித்து இதில் அலசப்பட்டன என்றும் தெரிகிறது.