காசும் வாங்கலை, ஓட்டும் போடலை! நாங்குநேரியில் தேர்தல் புறக்கணிப்பு!

தேவேந்திரகுல வேளாளர்களை எப்படியாவது ஓட்டுப் போட வைத்துவிட வேண்டும் என்று காங்கிரஸ், அ.தி.மு.க.வினர் கடுமையாகப் போராடினார்கள்.


ஓட்டுக்கு கூடுதலாக பணம் தரவும் தயாராக இருந்தார்கள். ஆனால், யாரையும் ஊருக்குள்ளே வரக்கூடாது என்று உறுதிபட சொல்லிவிட்டதால், 65 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப் போட யாரும் இல்லாமல் ஈயாடுகிறது.

இங்கு அதிமுக சார்பில் நாராயணனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் கிட்டத்தட்ட 113 கிராமங்களைச் சேர்ந்த தேவேந்திரகுலத்தவர்கள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

தங்கள் சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் மூலம் இவர்களை சமாதானப்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.

ஓட்டுப் போடுவதற்கு முயலும் யாரையும் தடுக்கக்கூடாது என்பதற்காக போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த சமூகத்தினர் ஓட்டு போடவில்லை என்றால் யாருக்குப் பாதிப்பு என்பதுதான் நாங்குநேரியில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.