காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் மணல் லிங்கத்தின் மகத்துவம் தெரியுமா? தோஷங்கள் நீங்கும் அற்புதம்

பஞ்சபூதத் தலங்கள் என்பவை சிவபெருமானை பஞ்சபூதங்களின் வடிவில் வழிபாடு செய்யும் இடங்களைக் குறிக்கும்.


நிலம் (பிருத்வி), நீர்(அப்பு), நெருப்பு (தேயு), காற்று (வாயு), ஆகாயம் (ஆகாசம்) ஆகியவைகளே பஞ்சபூதங்கள் என்றழைக்கப்படுகின்றன. 

பஞ்சபூதங்களே உலகில் உள்ள எல்லா உயிரினங்கள் உருவாக்கம், அவற்றின் வாழ்க்கை மற்றும் அழிவு ஆகியவற்றிற்கு மூலாதாரமாக உள்ளன. எனவேதான் இந்த பஞ்சபூத சக்திகள் ஒவ்வொன்றினையும் கொண்டு கோவில்களை உருவாக்கி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. 

அந்த வகையில் நிலத்தைக் குறிக்கும் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில். இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். இங்குள்ள லிங்கம் பிருத்வி லிங்கம் என்றழைக்கப்படுகிறது. 

இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது. 

பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார்.  

பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிருத்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில்.  பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர். 

ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன. 

கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர்.அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.