சேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.

“சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும்” என்ற முதுமொழிக்கேற்ப ஒவ்வொரு மனிதனும் தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தன் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.


எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மக்கள் சிக்கனமாக வாழ்ந்து, தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்கும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே சேமிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

“சிறு துளி பெரு வெள்ளம்” என்பதற்கேற்ப மக்கள் தாங்கள் ஈட்டிய பணத்தை, அஞ்சலகச் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், சிறுகச் சிறுக சேமிக்கப்படும் அத்தொகை பன்மடங்காகப் பெருகி, எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பை அளிக்கும். 

இந்த உலக சிக்கன நாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற, அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துளார்.