புரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் முதல்வர் எடப்பாடியார் சபதம்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் வாழ்த்துச்செய்தி கொடுத்துள்ளனர். புரட்சித்தலைவர் காட்டிய வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம் என்று சூளுரை எடுத்துள்ளனர்.


வறுமையின் கோரப் பிடியில் இளமைக் காலத்தில் தொடங்கி, புகழ் ஏணியின் உச்சத்தைத் தொட்டு, நாடாளும் மன்னனாக வாழ்வை நிறைவு செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உழைப்பாலும், முயற்சியாலும், தன்னலம் துறந்து, பிறர் நலம் பேணி வாழ்ந்த வாழ்க்கை முறையாலும் `மனிதர்களில் மாணிக்கம்’ என்ற இரவாப் புகழ் பெற்ற சரித்திர நாயகர். 

திரை உலகில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டு, அதன்மூலம் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை சொந்தமாக்கிக்கொண்ட புரட்சித் தலைவர், தனது உழைப்பும், புகழும் மக்களுக்கு நல்ல கருத்துகளையும், அறநெறிகளையும் கொண்டு சேர்க்கும் ஆயுதங்களாகப் பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். திரைப்படங்களின் மூலம், குறிப்பாக பாடல்களின் மூலம், புரட்சிகரமான சிந்தனைகளையும், சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் எடுத்துச் சொன்னதில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நிகராக இன்னொரு மனிதரை உலகில் வேறு எங்கும் காண முடியாது.  

புரட்சித் தலைவரின் திரைப்படங்கள் காட்டப்பட்டபோது, திரையரங்குகள் எல்லாம் வகுப்பறைகளாக அல்லவா மாறி இருந்தன.   

  கல்லாதபேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து

  காண்பதில் தான் இன்பம் என்தோழா! - என்றும்,

  ஒன்று எங்கள் ஜாதியே,

  ஒன்று எங்கள் நீதியே,

  உழைக்கும் மக்கள் யாவரும்

  ஒருவர் பெற்ற மக்களே - என்றும் பாடி,

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் போல, கலைவழிப் பாடம் நடத்திய `வாத்தியார்’ யாரேனும் இருக்க முடியுமா?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், தான் சொன்னதையெல்லாம் செய்தும் காட்டிய செயல் வீரர். உலகம் போற்றும் சத்துணவுத் திட்டம்; பெண்மையைப் போற்ற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு; இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 69 விழுக்காடு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு; கிராமப்புறங்களில் நிலவிய அடிமைத்தனங்களுக்குக் காரணமாயிருந்த நிர்வாக பதவி முற்றிலும் ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர் என்னும் புதுப் பதவிகள் மூலம் நிர்வாகத்தை மக்கள் கையில் கொண்டுசேர்த்த மனிதாபிமானப் பணி; தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் என்றெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நிகழ்த்திய சாதனைகள், வேறு யாராலும் அத்தனை எளிதாக செய்திட அரும் பெரும் சாதனைகளாகும். அவர் மக்கள் மனதில் புரட்சித் தலைவராகவும், பொன்மனச் செம்மலாகவும் அன்பு சிம்மாசனம் போட்டு மன்னாதி மன்னனாக வீற்றிருக்கிறார்.

ஒரு குடும்பத்தின் சுயநலத்திற்காகவும், சுரண்டல் சிந்தனைகளுக்காகவும் தமிழ் நாட்டையும், தமிழ்ச் சமூகத்தையும் பலிகொடுத்து, அதிகாரத்தை அடையத் துடிக்கும் தீய சக்தியின் அநியாயத்தை வெட்டி வீழ்த்தும் களமாக, எதிர்வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் இருக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.  

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் நடத்திய, இன்று நாமும் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நல்லாட்சி தொடர்ந்திட புரட்சித் தலைவரின் 104-ஆவது பிறந்த நாளில், வெற்றிநடை போடும் தமிழகத்தைக் காத்திட, நாம் அனைவரும் சபதம் ஏற்போம் என்று கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.