சாத்தான்குளம் விவகாரத்தை திசை திருப்ப அ.தி.மு.க.வின் ஐ.டி.விங்கினால் முடியவில்லை! ஐ.டி. விங்கை பலப்படுத்த புதிய நிர்வாகிகள்!

சாத்தான்குளம் விவகாரத்தை தி.மு.க. சிறப்பாக பயன்படுத்திக்கொண்டது. இதனை திசை திருப்ப அ.தி.மு.க.வின் ஐ.டி.விங்கினால் முடியவில்லை. ஆகவே, ஐ.டி. விங்கை பலப்படுத்தும் வகையில் புதிய நிர்வாகிகள் கீழ்மட்ட நிலையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.


சமீபத்தில்தான், அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவை நிர்வாக ரீதியிலான மாவட்டங்கள் அடிப்படையில் 4 மண்டலங்களாக பிரித்தனர். சென்னை மண்டல செயலாளராக அஸ்பயர் கே. சுவாமிநாதனும், வேலூர் மண்டல செயலாளராக எம். கோவை சத்யனும், கோவை மண்டல செயலாளராக சிங்கை ஜி.ராமச்சந்திரனும், மதுரை மண்டல செயலாளராக வி.வி.ஆர்.ராஜ் சத்யனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இவர்களால் மட்டும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற எண்ணத்திலும், வரும் காலத்தில் தேர்தலை எதிர்கொள்ளவும் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும் பகுதி அளவில் நிர்வாகிகளும், மாநகராட்சி வட்டம், நகர வார்டுகள், ஊராட்சிகளுக்கு தலா ஒருவரையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளனர். 

மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மண்டல செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளையும் கலந்து ஆலோசித்து தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர்.