தேர்தல் நேரத்தில் கிடுகிடுவென எகிறும் எடப்பாடி செல்வாக்கு... திகிலில் தி.மு.க.

தேர்தலுக்கு இன்னமும் 15 நாட்களே இருக்கும் நிலையில், எடப்பாடியாரின் தலைமையில் தேர்தலை சந்திக்கும் அதிமுக கூட்டணிக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் அளித்துவரும் ஆரவார வரவேற்பு, திமுக கூட்டணியை திகிலடையச் செய்திருக்கிறது.


புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் எடப்பாடி அண்மையில் ஆதரவு திரட்டினார். அவர் கலந்துகொண்ட ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளமாகக் காட்சியளித்தது. அதுபோலவே எடப்பாடியின் கான்வாய் பயணித்த சாலைகளிலும் மக்கள் ஆரவாரத்தோடு அணிவகுத்து நின்றதை காண முடிந்தது. இதுபற்றி முதல்வருடன் பயணிக்கும் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது அவர்கள் கூறியதாவது;

‘’ முதல்வரின் பிரச்சார பயணம் மறைந்த ஜெயலலிதாவின் பிரச்சார பயணத்தை அப்படியே நினைவூட்டுகிறது. முதல்வரை பார்ப்பதற்காக மக்கள் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். அவரும் அரசியல்வாதிகளின் வழக்கமான அடுக்குமொழி ஸ்டைலை விட்டுவிட்டு ஒரு கிராமத்து மனிதராக எதார்த்தமாக பேசுகிறார். எடப்பாடியின் இந்த வெள்ளந்தியான பேச்சுக்கு மக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்.

அதோடு எல்லா இடங்களிலும் அவர் ஒரே மாதிரியாக பேசுவதில்லை. ஒவ்வொரு இடத்திலும் வேறுவேறு சப்ஜெக்ட் எடுத்து பேசுவது நன்றாகவே ரீச் ஆகிறது. திமுகவையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் எடப்பாடி வறுத்தெடுப்பதை மக்கள் கைதட்டி வரவேற்கின்றனர். ’ திமுக ஆட்சிக்கு வந்தால் ரௌடிகள் ராஜியம் உருவாகும்’ என்கிற அவரது எச்சரிக்கையை பெண்கள் கூர்ந்து கவனிக்கின்றனர்.

எடப்பாடி பிரச்சாரம் செய்யும் இடங்களில் எவ்வித கெடுபிடிகளும் இல்லை. மக்கள் சுலபமாக வந்துசெல்ல முடிகிறது. இதனால் அவரை பார்க்க மக்கள் கூட்டம் முண்டியடிக்கிறது. இந்த கூட்டம் ஒரு அளவுகோல் என்றால் வரும் தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றியை பெற இருப்பது நிச்சயமாகியிருக்கிறது’’ என்கிறார்.

இதைப் பார்த்து கடும் அதிர்ச்சியில் இருக்கிறது தி.மு.க. தலைமை.