முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பில், பிப்ரவரி மாதத்துக்கு என்னவெல்லாம் தளர்வுகள்..?

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கடந்த 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து அடுத்தகட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


அதன்படி, 28.2.2021 நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதேநேரம், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கலை, அறிவியில், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் 8.2.2021 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 

9 மற்றும் 11ஆம் வகுப்புகள் மட்டும் 8.2.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 

இரவு 10.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள், நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கப்படுகின்றன. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 100 சதவிகித இருக்கைகளுடன் செயல்படலாம்.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 600 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்களுக்கு அனுமதி அளிக்க்கப்படுகின்றன. திறந்தவெளியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பொறுத்தவரையில் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகளுடன் நடத்தலாம்.

கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 சதவிகிதம் இருக்கைகளில் பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.  

பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.