ஏழு பேர் விடுதலையில் தமிழர்களை ஏமாற்ற வேண்டாம்.... தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை.

நீட் தேர்வு, மீத்தேன் திட்டம், ஈழத் தமிழர் படுகொலை என்று தமிழர்களுக்கு துரோகம் செய்யும் வேலைகள் எல்லாமே தி.மு.க. காலத்தில்தான் நடந்தன. ஆனால், உத்தமர் போன்று ஏழு பேர் விடுதலையில் அ.தி.மு.க. நாடகமாடுகிறது என்று தேர்தல் பிரசார மேடைகளில் பொய் பேசி வருகிறார் ஸ்டாலின்.


இந்த விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

’’ 7 பேர் விடுதலை விவகாரத்தில் தலைவர் முதல் தொண்டர் வரை திமுகவில் பொய் பேசி திரிகிறார்கள். உண்மை செய்தி நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும்’’ என கூறுகிறார் எடப்பாடி. தொடர்ந்து அவரே, ’’முந்தைய திமுக ஆட்சியின் போது கருணை மனு மீது அமைச்சரவை கூடி முடிவு எடுக்கும்போது, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்றலாம் என தீர்மானம் நிறைவேற்றினார். 

ஆனால் அதிமுக அரசு, 2018 ஆம் ஆண்டு நீதிமன்ற தண்டனையை ரத்து செய்யலாம் எனத் தீர்மானம் நிறைவேற்றியது. தமிழர்களுக்காக வாழ்வதாகச் சொல்லும் திமுக, இதர மூன்று நபர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க அமைச்சரவையில் அன்றே ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. இதுதான் வரலாற்று உண்மை’’ என திமுகவை அம்பலப்படுத்தியுள்ளார்.

திமுக மீதான எடப்பாடியின் இந்தக் குற்றச்சாட்டு உண்மைதான் என ஆமோதிக்கிறார்கள் எழுவர் விடுதலைக்காக குரல் கொடுக்கும் தமிழ் ஆர்வலர்கள். தேவை இல்லாமல் வாய் பேசி மாட்டிக்கொள்வதே தி.மு.க.வின் வேலையாக இருக்கிறது. பரிதாபம்தான்.