மராட்டியம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் ஆகிய 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் நிதி ஒதுக்கீடு உடனே தேவையென அழுத்தமான கோரிக்கை.!

கொரோனா காலத்தில் தமிழகத்தின் செயலை பிரதமர் பாராட்டினார். இதையடுத்து தமிழகத்துக்குத் தேவையான நிதியை வழங்குமாறு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.
அவர் பேசியபோது, ’தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு தொடர்பாக வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, காய்ச்சல் முகாம்களை நடத்தி தீவிரமாக செயல்பட்டதன் மூலம் மாநிலம் முழுவதும் புதிய தொற்று ஏற்படும் நிலை குறைந்துள்ளது. மேலும் ஏழை, எளிய மக்களுக்கு செய்யும் சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்காக 2 ஆயிரம் மினி கிளினிக் நகர மற்றும் கிராமப்புறங்களில் துவக்கப்படும் என்று அறிவித்துள்ளேன்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான உயர்மட்டக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுக்கும். தாங்களின் பரிசீலனைக்காக சில கோரிக்கைகளை உங்கள் முன் வைக்கிறேன்.
தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட அவசர கால நடவடிக்கை மற்றும் சுகாதார தயார் நிலைக்கான தொகுப்பு நிதியான ரூ.712.64 கோடியில் ரூ.511.64 கோடி தொகையை நாங்கள் பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே தங்களிடம் கேட்டுக்கொண்டபடி இந்த நிதித்தொகுப்பை ரூ.3 ஆயிரம் கோடியாக உயர்த்தித் தர வேண்டும்.
எங்கள் மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பை மேலும் பலப்படுத்த இந்த நிதி மிகவும் உபயோகரமாக இருக்கும். எங்கள் மாநிலத்தில் மாநில பேரிடர் நடவடிக்கை மற்றும் தணிப்பு நிதிமுற்றிலும் செலவழிந்து விட்டது. எனவே தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாயை தற்காலிக மானியமாக தமிழகத்துக்கு ஒதுக்கி தர வேண்டும்.
தற்போது நிலுவையில் உள்ள நெல் அரவை மானியத்தொகை ரூ.1,321 கோடியை வழங்கினால், அது நெல் கொள்முதல் செய்வதற்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும். உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைப்படி, மாநில அரசுப்பள்ளியில் படித்து, நீட் தேர்வுமூலம் தகுதி பெறும் மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் மருத்துவ இளநிலை பட்டப்படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.