தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி...! உதயநிதி போர்டு ஆஃப் டைரக்டர்.. போட்டுத்தாக்கிய எடப்பாடி பழனிசாமி.

தேர்தல் பரப்புரை மட்டுமின்றி, வேட்புமனு தாக்கல் செய்வதிலும் விறுவிறுப்பாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


நேற்றைய தினம் நல்ல நாள் என்பதால், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பிறகு தனது தேர்தல் பிரசாரத்தை அங்கேயே தொடங்கினார். பிரசாரத்தின் தொடக்கத்திலேயே சிக்ஸராக வெளுத்து வாங்கினார் எடப்பாடி பழனிசாமி.

‘‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதன் முதலாளிதான் ஸ்டாலின். அதில் உதயநிதி கனிமொழி , தயாநிதி மாறன் போன்றோர் போர்டு ஆப் டைரக்டர்கள். இவர்களெல்லாம் சேர்ந்துதான் அந்த கம்பெனியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று பேசியதற்கு மக்களிடையே க்ளாப்ஸ் அள்ளியது.

’’நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்பதால்தான் மக்கள் திமுகவை மறந்துவிட்டார்கள். ஆகவே மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று ஒருபோதும் நினைத்து விடாதீர்கள். உங்கள் கனவு ஒரு போதும் பலிக்காது’’ என ஸ்டாலினைப் போட்டுத் தாக்கிய எடப்பாடி, ‘’உங்களுக்குச் சேவை செய்யவும், எடப்பாடி தொகுதி தொடர்ந்து முதலமைச்சர் தொகுதியாக இருக்கும் என்ற நிலையை உருவாக்கிடவும், எடப்பாடி தொகுதி தமிழகத்தில் ரோல் மாடலாக இருக்கவும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டபோது, அங்கு கூடியிருந்த மக்கள் இரட்டை விரலைக் காண்பித்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

செல்லும் இடம் எல்லாம் எடப்பாடிக்கு குவியும் கூட்டமும், மக்கள் காட்டும் ஆதரவும், இவர்தான் அடுத்த முதல்வர் என்பதை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது.