ராஜீவ் கொலைக் கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியிருக்கிறது தமிழக அரசு. அத்தனை பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் தி.மு.க. நாடகம். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் ஆவேசம்
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று பேரறிவாளன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையில், விரைந்து முடிவெடுக்கும்படி கவர்னரை நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தி.மு.க. காலத்தில் நளினி ஒருவருக்கு மட்டுமே தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. மற்ற 6 பேரின் கருணை மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால், அ.தி.மு.க.வில்தான் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டது. மேலும், அந்த தீர்மானம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவர்னருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார் முதல்வர்.
விரைவில் 7 பேர் விடுதலை நடைபெற உள்ளதால், அதில் பெயரை தட்டிச்செல்லத்தான் தி.மு.க. இப்படி பேசுவதாகவும் குற்றம் சாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.