எளிமை என்பதற்கு உதாரணம் தான் எடப்பாடி பழனிசாமி.! ஆச்சர்யப்படும் பொதுமக்கள்.

அமைச்சராக மட்டுமே அறியப்பட்டிருந்த எடப்பாடி பழனிசாமி, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.


அப்போது அரசியல்வாதிகள் அனைவரும் அவரை அலட்சியமாகவே பார்த்தனர். இவரால் ஒரு மாதம் தாக்குப் பிடிக்கமுடியுமா என பலரும் கேலி பேசியதுண்டு. ஆனால் அத்தனை தடைகளையும் வெற்றிகரமாகத் தகர்த்து ஆட்சிக்கட்டிலில் இன்றைக்கு 4வது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறார் எடப்பாடி.

சேலம் மாவட்டத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, படிப்படியாக உயர்ந்த எடப்பாடியின் இந்த சாதனை சரித்திரத்தை அகில இந்தியாவுமே ஆச்சரியத்துடன் கவனித்து வருகிறது. அதிமுகவில் நிலவிய உட்கட்சி பூசல்கள், நாள் தவறாமல் எதிர்க்கட்சிகள் அள்ளியிறைக்கும் அவதூறுகள், பொய் குற்றச்சாட்டுகள் என அத்தனை நெருக்கடிகளையும் எளிதாகக் கடந்து இன்று வெற்றி சிகரத்தின் உச்சத்தில் எடப்பாடி இருப்பது அரசியல் ஆய்வாளர்களுக்கே புரியாத புதிராக இருக்கிறது.

மிகுந்த நிதி நெருக்கடியிலும் ஆட்சித்தேரை அவர் வெற்றிகரமாக நடத்திச் செல்லும் லாவகம், திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் காட்டும் வேகம், முடிவெடுப்பதில் காட்டும் மதிநுட்பம், அதிகாரிகளைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கும் சாமர்த்தியம் என எடப்பாடியின் நல்லியல்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட எடப்பாடியிடம் இருக்கும் குறிப்பிட்ட ஒரு நல்ல குணம்தான் கோடிக்கணக்கான மக்களிடம் அவரைக் கொண்டு சேர்த்திருக்கிறது. உச்சம் தொட்டாலும் என்றும் மாறாமல் இருக்கும் எளிமைதான் குறிப்பிட வேண்டிய அந்த நல்ல குணம்.

ஒரு சாதாரண கவுன்சிலர் ஆனதும் பல பேருடைய இயல்பு மாறிப்போய்விடும். ஆனால் முதல்வர் என்கிற சர்வ அதிகாரம் பொருந்திய பதவியை எட்டியும் இன்னமும் எடப்பாடி அப்படியே இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தொடங்கி சாதாரண பொதுஜனம் வரை யாரிடமும் அவர் எந்த மாறுபாடும் காட்டுவதில்லை. எல்லோரையும் மரியாதையுடனும், கரிசனையுடனுமே நடத்துகிறார். அதேநேரம் தவறு என்றால் அதனை தயங்காமல் சுட்டிக்காட்டுகிறார். வீண் பந்தா, வெட்டி ஆடம்பரத்தனங்களை அவர் அனுமதிப்பதில்லை.

பயணம் செய்யும் காலங்களில் ரோட்டில் குடிமக்கள், விவசாயிகளிடம் இயல்பாக கலந்துரையாடல் செய்வது இவருக்கு பொதுமக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. எளிமையும் அழகு என்பதற்கு உதாரணம் தான் எடப்பாடி பழனிசாமி.