ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிடம் திறப்புக்கு எடப்பாடி பழனிசாமி தீவிரம்

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்தை புதுப்பிக்கும் பணிகள் வேகவேகமாக நடந்துவருகின்றன. ஜெயலலிதா அரசியலில் ஒரு ஃபீனிக்ஸ் பறவை என்பதை ஞாபகப்படுத்தும் வகையில், அவரது நினைவிடத்தில் ராட்சத அளவிலான ஃபீனிக்ஸ் பறவை வடிவம் அமைக்கப்பட்டு வருகிறது.


அந்த ஃபீனிக்ஸ் பறவை போன்ற வடிவம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நினைவிடத்தை அழகாக மேலும் மெருகேற்றும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. 

இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறுகையில், '50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவிலான இடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள இடத்தில் அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன. சமாதி அருகில் வெள்ளை பளிங்கு கற்களால் தரைதளம் அமைக்கும் பணி மட்டும் தற்போது நடந்து வருகிறது.

 நினைவிடத்தில் சென்னை ஐ.ஐ.டி. வடிவமைத்த பீனிக்ஸ் பறவை அமைப்பு 15 மீட்டர் உயரத்தில் தலா 21 மீட்டர் நீளத்தில் 2 ராட்சத சிறகுகளை விரித்தப்படி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நேற்றுடன் நிறைவடைந்து விட்டது. நினைவிடம் மற்றும் அதனை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்கள் மெருகேற்றும் இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகிறது.

அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இந்த பணிகள் அனைத்தும் முடிந்துவிடும் என்று தெரியவந்துள்ளன. 

டிசம்பர் 5ம் தேதி, ஜெயலலிதா மறைந்த தினத்தன்று ஜெ.நினைவிடம் திறப்புவிழாவை பிரமாண்டமாக கொண்டாட வியூகம் வகுக்கப்பட்டது. ஆனால், அது வரையிலும் காத்திருக்காமல் பிரதமர் மூலம் நவம்பர் மாதமே திறந்துவைக்கலாம் என்று ஒரு திட்டமுள்ளது. இது, தேர்தல் அச்சாரக் கூட்டமாகவும் அமையலாம்.