முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள்!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 8.1.2019 அன்று சட்டப்பேரவையில், விழுப்புரம் மாவட்டம், பெரிய மாவட்டமாக இருப்பதால், நிருவாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்கள்.


அந்த அறிவிப்பிற்கிணங்க 12.11.2019 அன்று கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை 26.11.2019 அன்று நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.   

புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் 104 கோடி 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26,482 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 8 தளங்களுடன் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு இன்று முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள். 

அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பிற்கிணங்க 12.11.2019 அன்று செங்கல்பட்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, செங்கல்பட்டு வட்டம், வேண்பாக்கத்தில் 119 கோடி 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 27,062 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 4 தளங்களுடன் கட்டப்படவுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள்.