திதி சொல்லும் சேதி என்ன? உங்கள் ராசிக்கு எந்த திதியில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்?

ஒரு மாதம் என்பது சந்திரனின் 15 நாள் வளர்பிறை நாட்களையும்,15 நாள் தேய்பிறை நாட்களையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.


அப்படியான ஒரு மாதத்தில் 14 நாட்கள் வளர்பிறைத் திதிகளும்,14 நாட்கள் தேய்பிறை திதிகளும் ஏற்படுகிறது மீதம் 2 நாட்கள் ஒன்று அமாவாசை, மற்றொன்று பவுர்ணமி ஆகிறது.. அப்படியான இத்திதி தினங்களால் அனைத்து ராசியினருக்கு ஏற்படும் பலன்களும், எந்தெந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றியும் காண்போம்.

பிரதமை : பிரதமைத் திதியில் பிறந்தவர்கள் சுக வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் பெண்கள் மீது சற்று அதிக மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இத்திதியில் சுபகாரியங்களான யாகங்கள், ஹோமங்கள் திருமணம், கிரஹப்பிரவேசம் போன்றவற்றைச் செய்யலாம். இத்திதிக்கான தேவதை அக்னி பகவான். மகரம், துலாம் ஆகிய ராசியில் பிறந்தவர்கள் இந்த திதி தினங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இத்திதியில் பிறந்தவர்கள் சிவ பெருமானை வழிபட்டு வர நன்மை பயக்கும்.  

துவிதியை : துவதியைத் திதியில் பிறந்தவர்கள் நேர்மைக் குணம் மிக்கவர்களாக இருப்பார்கள், இவர் எவ்வகைக் கருவிகளையும் திறம்பட கையாளும் திறமை மிக்கவர்களாக இருப்பார்கள்.இத்திதியும் கோவில் விசேஷங்கள், யாகங்கள் போன்ற சுபக் காரியங்களைச் செய்ய ஏற்றதாகும். இத்திதிக்கு அதிபதி பிரம்ம தேவன். தனுசு, மீன ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் கவனமாக செயல்படுவது நலம். இத்திதி தினத்தில் அம்பிகையை வணங்க எல்லாம் சுபமாகும்.

திரிதியை : திரிதியை இவர்களின் மனதில் தீமையான எண்ணங்கள் மேலோங்கும் சற்று முரட்டுக்குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இத்திதி தினத்தில் கல்வி பயிலுதல், வேதம் கற்றல், கலைகளைப் பயிலாத தொடங்குதல் போன்ற காரியங்களைச் செய்யலாம். இத்திதியின் அதி தேவதை சக்தி தேவி. சிம்ம, மகர ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் கவனமாக செயல்பட வேண்டும். அம்மனைத் துதிக்க அனைத்தும் நலமாகும்.

சதுர்த்தி : சதுர்த்தி திதியில் பிறந்தவர்கள் தங்கள் செயல் பாடுகளில் ரகசியம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். பேராசை எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகவும் தந்திர சாலிகளாக இருப்பார்கள். இத்திதி தினங்கள் கடன்களை அடைக்க, நெடு நாள் பகையைச் சமரசம் செய்து கொள்ள, வேத சாத்திரங்களைக் கற்க ஏற்றதாகும்.இத்திதியின் அதி தேவதை எம தர்மன். ரிஷப, கும்ப ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் எச்சரிக்கையுடன் செயல் படுவது அவசியம். விநாயகரை வழிபட வினைகள் நீங்கும்.

பஞ்சமி : பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் பல நேர்மறையான குணங்களை பெற்றிருப்பார்கள். சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாகவும், நீண்ட ஆயுள் உடையவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக கோவில் சம்பந்தமான சுபக் காரியங்களைச் செய்ய ஏற்ற திதியாகும். ஜாதகத்தில் நாக தோஷம் கொண்டவர்கள் இத்திதியில் புற்றுள்ள கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தால், அவர்களின் நாக தோஷம் நீங்கும். இத்திதியின் தேவதை நாக தேவதைகள். மிதுன, கன்னி ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் கவனமாக செயலாற்ற வேண்டும்.

சஷ்டி : சஷ்டி திதியில் பிறந்தவர்கள் வீரம் மிக்கவர்களாக இருப்பார்கள். பணம், பொன் போன்றவற்றின் மீது அதிக ஆசைக் கொண்டவர்களாக இருப்பார்கள். உறவினர்களாலும், நண்பர்களாலும் அதிகம் விரும்பப்படுவார்கள். இதுவும் கோவில் சம்பந்தமான சுபக் காரியங்கள்,கோவில் குளங்கள் சீரமைத்தல் போன்ற செயல்களை செய்ய ஏற்ற திதியாகும். இத்திதிக்கான அதி தேவதை கார்த்திகேயன்.இத்திதியில் முருகனுக்கு விரதமிருந்து, அவரை வழிபட புத்திரப் பேறில்லாமல் தவிப்பவர்களுக்கு அப்பேறு கிட்டும். இத்திதிகளில் மேஷம், சிம்ம ராசிக்காரர்கள் கவனமாக செயலாற்ற வேண்டும்.

சப்தமி : சப்தமி திதிகளில் பிறந்தவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள். கற்றோர்களையும், முதியவர்களையும் மதிக்கத் தெரிந்தவர்கள்.நற்குணங்கள் நிறைந்தவர்கள். வெளியூர்,வெளிநாடு,கோவில்களுக்கு தீர்த்த யாத்திரை போன்ற பயணங்கள் செல்ல ஏற்ற திதியாகும். இத்திதியின் அதி தேவதை சூரிய பகவான். கடக ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய திதியாகும். நாராயணரை வழிபட அனைத்தும் நலம் பயக்கும்.

அஷ்டமி : அஷ்டமி திதியில் பிறந்தவர்கள் சிறந்த பேச்சாற்றலைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மனைவிக்கு கட்டுப்பாடு நடக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். கிருஷ்ணா பரமாத்மா அவதரித்த திதியாகும். புதிய கலைகள் கற்க, ஆயதப் பயிற்சி, போர்க் கலைகள் போன்றவற்றை கற்கத் தொடங்க ஏற்ற நாளாகும். இத்திதியின் அதி தேவதை சிவ பெருமான். கன்னி, மிதுன ராசிக்காரர்கள் கவனமாக செயலாற்ற வேண்டிய திதி. கிருஷ்ணா பரமாத்மாவை வணங்குங்கள்.

நவமி : நவமி திதியில் பிறந்தவர்கள் தைரியமிக்கவர்களாக இருப்பார்கள். கலைகளில் அதிக ஈடுபாடு இருக்கும். தங்கள் எதிரிகளை ஒழிப்பார்கள். தீய பழக்க, வழக்கங்களை ஒழிக்க, பிறர் மீது மாந்திரிகம் பிரயோகிக்க ஏதுவான திதியாகும். இத்திதியின் அதி தேவதை துர்கை அம்மன் . சிம்ம, விருச்சிக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய திதி. ஸ்ரீ ராமா பிரானை வழிபடவேண்டும்.

தசமி : தசமி திதியில் பிறந்தவர்கள் விஞ்ஞான அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். தொழில்,வியாபாரங்களில் மிகுந்த செல்வம் ஈட்டுவார்கள். திருமணம்,பெயர்சூட்டல்,கோவில் குடமுழுக்கு போன்ற சுபக் காரியங்கள் செய்ய ஏதுவான திதியாகும். இத்திதியின் அதி தேவதை எம தர்மன். சிம்ம, விருச்சிகக் காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய திதி தினம். சக்தி தேவியை வணங்க அனைத்தும் நலமாகும்.

ஏகாதசி : ஏகாதசி திதியில் பிறந்தவர்கள் பெண்கள் மீது மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். தர்மம் மீறியச் செயல்களை செய்வார்கள். இதுவும் சுபக் காரியங்கள் அனைத்தும் செய்ய ஏற்ற திதி தினமாகும்இத்திதியின் அதி தேவதை ருத்திரன். தனுஷ் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய திதி.பெருமாளை வணங்குங்கள்.

துவாதசி : துவாதசி திதியில் பிறந்தவர்கள் செல்வமிக்கவர்களாக இருப்பார்கள்.பெண்களால் அதிகம் விரும்பப்படுவார்கள். கோவில் சம்பந்தமான காரியங்கள்,சிற்பம் ஓவியம் போன்ற கலைகளைப் பயில ஏற்ற திதியாகும்.இத்திதியின் அதி தேவதை விஷ்ணு. மகர, துலா ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய திதி. முருகனை வணங்க அனைத்தும் ஜெயமாகும்.

திரியோதசி : இத்திதியில் பிறந்தவர்கள் நல்ல மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுற்றமும், நட்டோம் அதிகம் பெற்றிருப்பர். இதுவும் தெய்வீக,சுபக் காரியங்கள் அனைத்தும் செய்ய ஏற்ற திதியாகும். இத்திதியின் அதி தேவதை சிவ பெருமான். ரிஷப, கும்ப ராசிக்காரர்கள் கவனமுடன் செயலாற்ற வேண்டிய திதி. சிவனை வழிபட வேண்டும்.

சதுர்தசி : இத்திதியில் பிறந்தவர்கள் நல்ல உடல், மன பலம் கொண்டவர்களாக இருப்பார்கள்.தங்கள் நினைத்ததை நடத்திக் காட்டுவார்கள். கல்வி கற்க தொடங்க, புதிய கலைகள் பயில ஏற்ற திதியாகும். இத்திதியின் அதி தேவதை காளி. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசியினர் கவனமுடன் இருக்க வேண்டிய திதி. பைரவரை வழிபட துன்பங்கள் நீங்கும்.