துவாரகை கிருஷ்ணரும் மதுரை சொக்கரும் ஒரே இடத்தில் தரிசனம்..! அற்புத ஆலயம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்த தலமாக கருதப்படுகிறது.


23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் உறையும் ராஜகோபால சுவாமி, கிருஷ்ணரின் வடிவமாக அறியப்படுகிறது. குருவாயூரைப் போலவே, மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயத்தையும் ‘தட்சிண துவாரகை’ என்று அழைக்கிறார்கள். இங்கு அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் வாசுதேவப் பெருமாள் என்பதாகும். உற்சவரின் திருநாமம் ராஜகோபால சுவாமி. தாயாரின் பெயர், செங்கமலத் தாயார். இது தவிர செண்பக லட்சுமி, ஹேமாம்புஜ நாயகி, ரக்தாப்ஜ நாயகி, படிதாண் டாப் பத்தினி ஆகிய திருநாமங்களிலும் தாயார் அழைக்கப்படுகிறார். உற்சவரின் பெயரான ராஜகோபால சுவாமி என்ற பெயரிலேயே ஆலயம் விளங்குகிறது.

ராஜகோபாலன் கோவில் கொண்டுள்ள மன்னார்குடியில் சொக்கநாதர் இருக்கும் அழகிய ஆலயம் அமைந்துள்ளது பாமணி ஆற்றில் கரையில் அமைந்துள்ள இவ்வாலயம் மீனாட்சி அம்மன் கோவில் என அழைக்கப்படுகிறது மூன்று நிலை கோபுரத்துடன் கலைநயம் மிக்க கூம்பு வடிவ கூரைகளும், உருட்டி செய்யப்பட்ட தூண்களுடன் நாயக்கர் கால கட்டுமானங்களுடன் உள்ள திருக்கோயில்.

பிரகாரத்தின் நன்கு புறங்களிலும் திருமாளிகை மண்டபங்கள் உள்ளன. தென்புறம் விநாயகர், நால்வர் தென்மேற்கு மூலையில் தன்வந்திரி சன்னதி, அடுத்து ஸ்தல விநாயகர் காசி விஸ்வநாதர், சித்தி விநாயகர் ஏகாம்பரேஸ்வரர், முருகன், திருமால், மகாலட்சுமி, சரஸ்வதி, ஐயப்பன் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. வடகிழக்கில் நவகிரகம், பைரவர், சனி சன்னதிகள் உள்ளன.

மன்னார்குடி தலத்தில் தவம் இருந்த கோபிலர், கோபிரளயர் என்ற இரு முனிவர்களுக்கு கண்ணன் தன் 32 வித லீலைகளை திவ்ய தரிசனமாக அருளினார். அந்த இடத்தை விட்டு அகல மனமில்லாத மகரிஷிகள் பாமணி நதியின் அருகில் பர்ணசாலை அமைத்து வாழ்ந்தனர். வடமதுரை கண்ணனது 32 லீலைகளை தரிசித்தவர்கள் தென்மதுரை சிவபெருமான் செய்தருளிய 64 திருவிளையாடல்களையும் இத்தலத்தில் தரிசித்து மகிழ வேண்டி தவம் செய்தனர்.

அதில் மகிழ்ந்த சிவன் மூல லிங்கத்திலிருந்து மீனாக்ஷி அம்மையோடு ரிஷப வாகனத்தில் தோன்றி 64 திருவிளையாடல்களையும் காட்சி தந்தருளினார். மகரிஷிகள் இருவரும் ஈசனுக்கு அங்கே ஆலயம் நிர்மாணித்து பூஜைகள் நடத்தி பிரம்மோற்சவமும் செய்து மகிழ்ந்தனர். மதுரையில் நடப்பது போலவே உற்சவரும் நடத்தினர். அஷ்டமி, நவமி, மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை போன்ற திருவிளையாடல் சம்பவங்களும் உற்சவமாக நடத்திக் காட்டப்படுகின்றன.

இப்படி துவாரகை நாதரும், மதுரை சொக்கநாதரும் மன்னார்குடியில் கோவில் கொண்டு வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளிக்கின்றனர்.