தென் திசையில் விளக்கு ஏன் ஏற்றக்கூடாது? அதிர்ச்சி தரும் ஆன்மிக தகவல்!

நாம் தினந்தோறும் காலையும், மாலையும் பூஜை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தீபம் ஏற்றுவதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன.


தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தைமட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை  ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும். 

சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும். தென் திசையில் உள்ள  முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும். 

நாம் உபயோகப்படுத்தும் திரிகளுக்கும் மகத்துவம் இருக்கிறது. 

பஞ்சுத்திரி - சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி. 

தாமரைத் தண்டு திரி - முற்பிறவியின் பாவங்களை அகற்றி செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால்  தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். 

வாழைத்தண்டு திரி - மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். 

வெள்ளெருக்குப் பட்டைத் திரி - செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில்  விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப்பெருமானுக்கும் உகந்தது இது. 

தம்பதிகள் மனமொத்து வாழவும், மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரிபோட்டு விளக்கேற்ற வேண்டும். 

அதிகாலையில் 3 மணியிலிருந்து 5 மணி வரை தீபம் ஏற்றினால், வீட்டில் சர்வமங்களமும் பெருகும். விளக்கைத் திரியால் தூண்டி விட வேண்டும். பூஜை விளக்கைத் தானே அணைய விடக் கூடாது. 

விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும். 

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். . இதனால் பூ, பால் துளி இவைகளைக் கொண்டு சமாதானமாக அணைக்க வேண்டும். வாயால் ஊதி அணைப்பது கூடாது. மாலையில் விளக்கேற்றும் போது, கொல்லைப் புறக் கதவை மூடி விட வேண்டும். வெள்ளி ஜோதியை பூஜை அறையில் வைத்தால், ஒரு பித்தளைத் தட்டின் மீதுதான் வைக்க வேண்டும். விளக்கை வெறும் தரையில் வைக்கக் கூடாது. 

திருவிளக்கிற்கு பால், சர்க்கரை, கற்கண்டு கொண்டு நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகைத் திருநாளன்று அவல் பொரியில் வெல்லத்தைப் பாகு காய்ச்சி ஊற்றி ‘கார்த்திகைப் பொரி’ செய்து நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறப்பு. 

விநாயக பெருமானுக்கு-1, 7 தீபம், முருகருக்கு-6 தீபம், பெருமாளுக்கு-6 தீபம், நாக அம்மனுக்கு-4 தீபம், சிவனுக்கு-3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு-2 தீபம், மகாலட்சுமிக்கு-8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும். 

விளக்கேற்றிய பின் மலர் அர்ச்சனை செய்யும் போது கூற வேண்டிய மந்திரம்: 

இல்லக விளக்கது இருள் கெடுப்பது 

சொல்லக விளக்கது ஜோதி உள்ளது 

பல்லக விளக்கது பலருங் காண்பது 

நல்லக விளக்கது நமச்சிவாயவே