கட்சித் தொண்டன் முதல் நிர்வாகி வரை எல்லோரையும் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்யும் துரைமுருகன்.. தடுக்க முடியாத ஸ்டாலின்.

தி.மு.க.வில் ஜமீன்தார் போன்று திகழ்பவர் துரைமுருகன். அவரை கேள்வி கேட்பதற்கும், தடுத்து நிறுத்தவும் யாரும் இல்லை என்பதால், கட்சித் தொண்டன் முதல் நிர்வாகி வரை எல்லோரையும் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்வார்.


முன்பு ஒரு முறை ஸ்டாலினையே மோசமாக விமர்சனம் செய்தார் என்று சொல்லப்பட்டது. அதன்பிறகு, அதற்கு விசாரணை நடத்தப்பட்டு, சமாதானப் படலம் நடந்தேறியது தனிக்கதை. 

வேலூரில் நேற்று அரசு உத்தரவுக்கு மாறாக, திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார் துரைமுருகன். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், ,’’ கூட்டணியில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம். அப்போதுதான் எவன் எவன் எங்கிருக்கிறான் என தெரிய வரும்…’’ என்று கூட்டணிக் கட்சியினரை மட்டமாகவும் ஏக வசனத்திலும் பேசினார்.

துரைமுருகனின் இந்த வாய்க் கொழுப்பான பேச்சு, திமுக கூட்டணி கட்சிகளை கொந்தளிக்கச் செய்திருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியும் விடுதலை சிறுத்தைகளும் கடும் அதிருப்தியில் உள்ளன.

ஏனென்றால், ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எவ்வித விமர்சனமும் இன்றி தி.மு.க. கூட்டணியில் தொடர்கின்றன. ஆனால், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகளை வெளியேற்றிவிட்டு, ராமதாஸ் மற்றும் விஜயகாந்த் கட்சியை உள்ளே கொண்டுவருவதுதான் துரைமுருகனின் ஐடியா.

இரண்டு கட்சிகளையும் மட்டம் தட்டியே கூட்டணியை உடைத்துவிடுவார் துரைமுருகன் என்று தி.மு.க. தொண்டர்களும் தவிக்கிறார்கள். என்ன செய்வது, துரைமுருகனை அடக்கிவைக்கும் அளவுக்கு ஸ்டாலினுக்கு தகுதியும் ஆளுமையும் இல்லையே. அதுதான் மேட்டரே.