அக்காவை கொடுமைப்படுத்திய கணவரை தீர்த்துக்கட்டிய தம்பி! செல்போன் மூலம் அம்பலமான விபரீதம்!

மது அருந்திவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகை மாவட்டத்தில் நாகூர் வெட்டாற்று என்னுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாதவாறு ஆண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினருக்கு உடனே தகவல் தெரிவித்தனர். 

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சில மணிநேரம் சம்பவ இடத்தில் ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கின்றனவா என்று தேடி கொண்டிருந்தனர்.

அப்போது இறந்து கிடந்த அவன் சடலத்திற்கு அருகில் செல்போன் ஒன்று கிடந்தது. அதை பரிசோதித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரே கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இவரும் இவருடைய மைத்துனருமான கார்த்திக் மது அருந்துவதற்காக புதுச்சேரிக்கு வந்திருந்தனர். இதனால் காவல்துறையினர் கார்த்திக்கிடம் பலத்த விசாரணை நடத்தினர்.

அப்போது கார்த்திக் மகேந்திரனை கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில், "கடந்த ஒரு வார காலமாக மது அருந்திவிட்டு என் அக்காவை மகேந்திரன் அடித்து துன்புறுத்தி வந்தார். இதனை என்னால் சகித்து கொள்ள இயலவில்லை. அதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். மது அருந்தலாம் என்று பாண்டிச்சேரிக்கு அழைத்து வந்து அவருடைய கழுத்தை நெரித்து வெட்டாற்றில் கொலை செய்தேன்" என்று கூறியுள்ளார்.

வாக்குமூலத்தை பெற்ற காவல்துறையினர் கார்த்திக்கை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.