தலித்துகளும் நாடகக் காதலும்..! வன்னியர்களும் ஜாதிப் பெருமையும்! வில்லனாக திருமா..! திரவுபதி டிரெய்லர் வைரலானதன் பின்னணி!

அண்ணன் என்று ஒரு கேரக்டரை அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த நபரின் சிகை அலங்காரம், ஆடை அணிந்துள்ள விதம் போன்றவை அப்படியே இந்த படத்தில் திருமாவளவனை வில்லனாக காட்சிப்படுத்த முயன்று இருப்பது தெரிய வருகிறது.


காலம் காலமாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை கவுண்டர்கள், வன்னியர்கள், தேவர்களை உயர்த்தியும் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் ஒரு கிராமத்தையே ரட்சிக்க வந்தவர்கள் என்பது போல் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தன. உதாரணத்திற்கு தேவர் மகன், சின்னக் கவுண்டர், மறுமலர்ச்சி போன்ற படங்களை சொல்லலாம்.

இந்த படங்களில் எல்லாம் தேவர்கள், கவுண்டர்கள் மற்றும் வன்னியர்களை கதாநாயகர்களாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். அந்த கிராமத்தில் உள்ள தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு கை கட்டி சேவகம் செய்பவர்களாக காட்டப்பட்டிருப்பார்கள். மேலும் தலித்துகள் துன்பம் அடையும் போதெல்லாம் காப்பாற்றுவதும் இந்த ஜாதியினர் தான் என்பது போன்றே திரைக்கதை செல்லும்.

இதனை எல்லாம் உடைத்து தலித்துகளை ஹீரோவாக அடையாளப்படுத்தியவர்களில் முதன்மையானவர் ரஞ்சித். காலா, கபாலி படங்களில் ரஜினியை நேரடியாக தலித்தாக காட்டவில்லை என்றாலும் அவருடைய கேரக்டர் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதே போல் கடந்த ஆண்டின் கடைசியில் வெளியான அசுரன் படத்திலும் தனுஷ் தலித்தாக நடித்திருப்பார்.

கோபி நயினாரும் தலித்துகளை முன்னிலைப்படுத்தி படங்களை எடுத்து வருகிறார். இதில் குறிப்பிட்ட சொல்ல வேண்டிய விஷயம் என்ன என்றால் இவர்கள் படங்களில் எல்லாம் ஆதிக்க சாதி, ஆண்டை பரம்பரை என்று கூறிக் கொள்பவர்களை விமர்சிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்று இருக்கும். இதனால் தலித் கதாநாயகர்கள் படத்திற்கு ஒரு தரப்பு ஆதரவும் இன்னொரு தரப்பு கடும் எதிர்ப்பும் தெரிவிப்பது வாடிக்கை.

இப்படியான சூழலில் வெளியாகியிருப்பது தான் திரவுபதி படத்தின் டிரெய்லர். முதலில் டிரெய்லரை நீங்கள் பார்த்துவிடுங்கள்..

டிரெய்லரிலேயே உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஒரு காட்சியில் ஹீரோ அடங்கிப் போகுமாறு கூற அடங்கக்கூடாது என்று எங்கள் அண்ணன் கூறியுள்ளார் என்று அந்த கேரக்டர் கூறுகிறது. தலித்துகளை பொறுத்தவரை அடங்கமறு, அத்துமீறு, திருப்பி அடி, திமிறி எழு என்கிற கொள்கை முழக்கத்தை முன்வைத்தவர் திருமா.

அந்த வகையில் தங்களை அடங்க கூடாது என்று திருமா கூறியிருப்பதாக கூறும் அந்த கேரக்டர் அடுத்த காட்சியிலேயே அந்த ஜாதிப் பெண்களை திருமணம் செய்து செட்டில் ஆகுமாறு எங்கள் அண்ணன் கூறியுள்ளார் என்கிற வசனமும் வருகிறது. எப்போதோ ஒரு முறை திருமாவளவன் கவுண்டர், வன்னியர் பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்ளுங்கள என்று பேசியிருக்கிறார்.

அதனை மையப்படுத்தி தான் இப்படி ஒரு வசனம் உள்ளது. அதோடு மட்டும் அல்லாமல் தலித் இளைஞனை காதலித்து திருமணம் செய்த பெண் ஒருவரை அவரது உறவினர் மிரட்டி வீடியோ எடுப்பது போன்றும், தலித் இளைஞர்கள் ஜாதி இந்துக்களை காதலிப்பதே காசுக்காக என்பது போலவும் இதனை திட்டமிட்டு ஒரு குழு இயக்குவதாகவும் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதோடு மட்டும் அல்லாமல் படத்தின் ஹீரோவான ரிஷி ரிச்சர்ட், கடா மீசையுடன் வன்னிய இளைஞராக நடித்துள்ளார். அவர் பேசும் வசனங்களும் கூட நேரடியாக வன்னிய பெண்களை காதலிக்கும் தலித் இளைஞர்களை சுட்டிக்காட்டுவது போல உள்ளது. இப்படி படம் முழுக்க ஜாதியம் பேசப்படும் நிலையில் ஒரு கேரக்டரை அப்படியே திருமாவளவனை போலவே நடிக்க வைத்துள்ளார்கள்.

இதுநாள் வரை தலித்துகளை கொண்டாடி எடுத்த படங்களை சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட சிலர் வைரலாக்கிய நிலையில், நாடக காதல் என்று கூறி வெளியாகியுள்ள திரவுபதி டிரெய்லரை தலித்துகளுக்கு எதிராக அரசியல் செய்யும் சிலர் வைரலாக்கி வருகின்றனர். இதற்கு சாமான்ய ஜாதி இந்துக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.