தோசையில் மறைந்திருக்கும் நவக்கிரகங்கள்! இறைவனுக்குப் படைக்கும் தோசையின் ஆன்மிக, ஜோதிட ரகசியம்!

நம் எல்லோரும் நவராத்திரி விழாவிற்காக தினம் தினம் வகை வகையான பொருட்களை சுவாமிக்கு நிவேதனமாக படைக்கிறோம்.


ஆனால், அந்த காலத்தில் சுவாமிக்கு திருவிழாக்களிலும், பண்டிகை தினங்களிலும் படைக்கப்படும் உணவு வகைகளில் தவறாமல் தோசையும் இடம்பெற்றிருந்தது. தோசையில் என்ன இருக்கிறது என்று யோசிக்காதீர்கள். தோசையின் பின்னால் மிகப் பெரிய ஆன்மிகமும், ஜோதிட ரகசியமும் மறைந்திருக்கிறது.

தோசையில் நவ கிரகங்களும் அடங்கியிருக்கின்றன. எப்படியென்று பார்ப்போம். நெருப்பு அரிசி, உளுந்து, வெந்தயம், தோசைக்கல் இதெல்லாம் அவசியம் தோசை தயார் செய்ய வேணும். கல்லில் தோய்த்துச் செய்வது எனும் பொருளில், தோய் + செய் எனும் இரண்டு சொற்கள் இணைந்து உருவானது தான் தோய்செய். பேச்சு வழக்கில் தோசை என்று ஆனது.

அக்னி தான் சூரியன், அரிசி - சந்திரன், உளுந்து- ராகு, கேதுவிற்கு உகந்த தானியம், வெந்தயம் - புதனுக்குகந்த தானியம். அப்புறம் தோசை கல் இரும்பினால் ஆனது. அது சனி கிரகத்திற்குரியது. தோசையின் பொன்னிறம் செவ்வாய் கிரகத்திற்குரியது.

அதை உண்பவர்கள் ஆண்களும், பெண்களும் தானே! ஆண் - குரு. பெண் - சுக்கிரன். வட்ட வடிவிலான தோசை இந்த பிரபஞ்சம். இன்னொரு முக்கியமான விஷயம் தோசையை எப்பவுமே கடிகார சுற்றுப்பாதையில் சுட்டால் தான் வரும். இந்த பிரபஞ்சம் அப்படித் தானே சுற்றி வருகிறது.

ஆரம்ப காலங்களில் தோசையை விசேஷ நாட்களில் கடவுளுக்கு படையலாகப் படைத்து பின் உண்டு வந்தார்கள். ஜோதிடத்தில் தோசை பரிகார உணவாகவும் இருந்து வந்துள்ளது. பல கோவில்களிலும் தோசையை பிரசாதமாக வழங்கி வந்த வழக்கமும் இருந்துள்ளது.

ஏன், இன்றும் கூட அழகர் கோவில் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்து பிரசாதமாக கோவிலில் வழங்கி வருகிறார்கள். நம் முன்னோர்களுக்கு தோசை என்பது அதிரசம், முறுக்கு, வடையைப் போல பலகார வகையாகத் தான் இருந்தது. பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறி விட்டது.