டோல்கேட்டில் இனி காத்திருக்கவே வேண்டாம்... கட்டாயமாகிறது தானியங்கி கட்டணம்!

மணிக்கணக்கில் சுங்கச்சாவடியில் காத்திருப்பதற்கு விடை கொடுக்கிறது மத்திய அரசு. நாடுமுழுவதும் தானியங்கி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் டிசம்பரில் அறிமுகம்


நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையை எளிதாக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துறைக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதனால் டிசம்பர் மாதம் முதல் சுங்கச்சவாடியில் வண்டியை நிறுத்தாமலே பணம் செலுத்திவிட்டு தங்கள் பயணத்தை தொடரலாம் என்பது வாகன ஓட்டிகளுக்கு கிடைத்த பிரசாதம் அல்ல அல்வா என்றே சொல்லலாம். 

ஒரு நகரம் விட்டு மற்றொரு நகரத்திற்கு விரைவாக செல்லவேண்டும் என்பதற்காகத்தான், விமானம், ரயில் போக்குவரத்தக்கு அடுத்தபடியாக மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் முக்கிய அங்கம் வகிக்கிறது. அப்படிப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ளூர் வழியாக சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி நேரத்தை வீணடிக்கவேண்டாம் என்பதற்காகவும் புறவழிச்சாலை அமைத்து பாலங்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது. ஆனால் அந்த செலவுகளை அரசாங்கம் எப்படி ஈடுகட்டும்? ஒரே வழி வாகன ஓட்டிகளான நம்மிடம் இருந்துதான் சுங்கக்கட்டணம் வசூலிப்பது மட்டுமே.

தேசிய, மாநில நெடுஞ்சாலையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் சீறிப்பாய்ந்தாலும் ஒவ்வொரு சுங்கச்சவாடியிலும் 10 நிமிடம் முதல் அரைமணிநேரம் வரை நின்று செல்வதால் நாள்தோறும் வாகன ஓட்டிகள் புலம்பும் புலம்பல்களுக்கு அளவே இல்லை. அதனால் சுங்கச்சவாடி ஊழியர்களிடையே தகராறு, அடிதடி வன்முறையும் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டுதான் உள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளை களைய தானியங்க கட்டணம் வசூலிக்கும் முறை (பாஸ்ட் டேக்) கடந்த 2017ம் மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தத் திட்டம் தற்போது நாடு முழுவதும் 180 சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்பம் காரணமாகவும் தற்போது பாஸ்ட் டேக் சேவை முழுமை பெறவில்லை,

இதுகுறித்து நேற்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்ட் டேக் சேவையை டிசம்பர் மாதம் முதல் கொண்டுவர அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் வாகன ஊட்டிகள் பாஸ்ட் டேக்கில் ரீசார்ஜ் செய்துவிட்டு சுங்கச்சாவடிகளில் நிற்காமலேயே செல்லலாம். பாஸ்ட் டேக் சேவை என்றால் என்ன? பாஸ்ட் டேக் முறையை பயன்படுத்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் ஆர்.சி.புக் உள்ளிட்டவற்றின் ஒரிஜினலை ஏதேனும் ஒரு சுங்கச்சாவடிக்கு சென்று தங்கள் வாகன எண்ணை பதிவு செய்துகொள்ளவேண்டும்.

பின்னர்  பாஸ்டேக் இணையதளத்திற்கு சென்று நம்முடைய வாகன எண்ணிற்கு தேவையான அளவிற்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கை நேரிடையாக இணைத்துவிடலாம். அதன்பின்னர் இந்தியாவில் எங்குவேண்டுமானாலும் சுங்கச்சாவடியில் நிற்காமலே செல்லலாம். ஒருவேளை தொழில்நுட்பக் கோளாறு அல்லது நாம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் மட்டுமே பணம் கொடுத்து செல்லவேண்டிய நிலை ஏற்படும்.

இந்தத் திட்டம் அமலானால் “தேசிய நெடுஞ்சாலையில் ஒரே போக்குவரத்து நெரிசல் அதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு வரமுடியவில்லை” என நமது நலம் விரும்பிகள் நம்மிடம் பொய் சொல்லமுடியாது!