சர்க்கரை நோயை குணமாக்கும் எருக்க இலை காலணி வைத்தியம்..! வைரல் வீடியோவின் உண்மை பின்னணி!

சமூக வலைத்தளங்களில் போலி அறிவுரைகளை நம்பி நோய்களுக்கான சிகிச்சையில் ஈடுபடவேண்டாம் என்று பல்வேறு சித்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தற்போதைய காலத்தில் யூடியூப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அனைத்து சம்பந்தமான விஷயங்களும் பகிரப்பட்டு வருகின்றன. அதுபோன்று சிலர் சித்த மருத்துவத்திற்கான அறிவுரைகளையும் பரப்பிவிட்டு செல்கின்றனர். அதையும் நம் மக்களில் சிலர் உண்மையா, பொய்யா என்ற ஆராயாமல் செயல்படுத்தி பார்க்கின்றனர். இது மிகவும் வருத்தமளிக்கும் செய்தியாகும்.

சமீபத்தில் டிக்டாக்கில் எருக்க இலைகளை காலணிகளுக்கு அடியே வைத்துக்கொண்டு ஒரு மணி நேரம் நடந்தால் கால் எரிச்சல் குறைந்துவிடும் என்றும் சர்க்கரை நோய் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கிவிடும் என்றும் நபரொருவர் கூறியுள்ளார். இந்த வீடியோவில் நமக்கு ஏற்பட்ட சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள ஒரு பிரபல சித்த மருத்துவரை அணுகினோம்.

அவரிடம் கேட்டபோது இவற்றில் பெரும்பாலானவை சுய கருத்துக்களே என்று கூறி நம்மை அதிர வைத்தார். அதாவது, "எருக்க இலை மருத்துவ குணம் நிறைந்தது தான். இருக்கையிலேயே எண்ணெயாக்கி, செங்கல்லை சுடவைத்து அதன்மீது இலைகளை போட்டு காலை வைத்து வைத்து எடுத்தால் கால் எரிச்சலிலிருந்து விடுபடமுன்னேற்றம் ஏற்படும்.

ஆனால் அந்த வீடியோவை காண்பித்து இதுபோன்று வெறும் இலைகளை காலனிக்குள் சொருகி கொண்டு நடந்தால் எந்தவித பயனும் இருக்காது. மேலும் நிச்சயமாக எருக்க இலைக்கும் சர்க்கரை நோய்க்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இதேபோன்று கல்லுப்பு மாரடைப்பைத் தடுக்கும் என்று வெளியாகிவரும் மருத்துவ வீடியோவானது முற்றிலும் அபத்தமானது.

சமூக வலைத்தளங்களில் தற்போதெல்லாம் பலரும் தங்களுக்கு வேண்டிய மருத்துவ அறிவுரைகளை அள்ளி தெளித்துவிட்டு செல்கின்றனர். நிச்சயமாக நம்முடைய மக்கள் அவற்றை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லையேல் ஒன்று வீண் முயற்சி என்ற ரீதியில் சிக்கிக்கொள்ளும், இல்லையென்றால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளிவிடும்.

இறுதியாக நோயாளிகளின் விவரங்களை பாதுகாத்து மருத்துவம் அளிப்பதே மருத்துவர்களின் முதன்மையாகும். ஆனால் அவர்களை வைத்துக்கொண்டு விளம்பரம் செய்து நோயாளிகளை திரட்டி வருபவர்களின் போலிகளே" என்று தன்னுடைய ஆதங்கங்களை கூறியுள்ளார். இனியாவது இதுபோன்ற வீடியோக்களை நம்பாமல் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று செயல்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.