ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிக்க வேண்டாம்! போலீசுக்கு முதல்வர் அதிரடி ஆணை!

ஹெல்மெட் அணிந்து செல்லாத இருசக்கர வாகன ஓட்டுநர்களை நடுரோட்டில் தடுத்து நிறுத்த வேண்டாம் என்று மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹெல்மெட் அணியாதவர்களின் வண்டியை நடுரோட்டில் நிறுத்தி வரும் சம்பவமானது நாட்டின் பல்வேறு இடங்களில் பெருகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றமும் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த சட்டத்திற்கு எதிர்மறையான பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. வாகன ஓட்டுநர்களை நடுரோட்டில் நிறுத்தி வைப்பது மக்களுக்கு பெரும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது என்று பொதுமக்கள் பலர் வெளிப்படையாகக் கூறினர்.

அம்மாநில முதலமைச்சரான தேவேந்திர பட்னாவிஸ் இந்நிலையில் ஒரு முக்கியமான அறிவிப்பு மேற்கொண்டுள்ளார். அதாவது ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்த வேண்டாம் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். இதனை ஏற்கனவே ஒருமுறை அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

அதாவது மகாராஷ்டிர மாநிலத்தின் பிரதான சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதன் உதவியோடு ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர்களின் வண்டிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும்ஹெல்மெட் அணியாதவர்களின் இல்லத்திற்கு ஈ-செல்லான் மூலம் அவர்கள் கட்ட வேண்டிய தொகையை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். பொதுமக்கள் இணையதளம் வழியாகவே பணத்தை செலுத்தி விடலாம். இருமுறைக்கு மேல் சிக்குவோருக்கு அபராதம் பண்மடங்கு உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

கேக்குறதுக்கு நல்லா இருந்தாலும் சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது என்று நெட்டிசன்கள் வினவுகின்றனர்.