என்னாது, ராகவேந்திரா கல்யாண மண்டபம் 250 சதுர அடியில் இயங்குகிறதா..?

ரஜினி தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு ட்வீட் போட்டுவிட்ட பிறகும், ராகவேந்திரா கல்யாண மண்டப சர்ச்சை ஓயவே இல்லை. இந்த நேரத்தில் சில புதிய விவகாரங்களைக் கிளப்புகிறது, ஷாஜகான் என்பவரின் பதிவு.


கல்யாண மண்டபம் ஒரு சேவை வழங்குகிறது. அந்த சேவைக்கு கட்டணம் கிடைக்கிறது. அதற்கு சேவை வரி செலுத்தலாம். லாக் டவுன் காரணமாக சேவையே வழங்கப்படவில்லை, எனவே வருவாய் இல்லை, எனவே சேவை வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால் சொத்து வரி என்பது அப்படியல்ல. சொத்தின் வருவாய் எவ்வளவு கிடைக்கக்கூடும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில்தான் சொத்துவரி போடப்படுகிறது என்றாலும், சொத்து என்பது நிலையானது. வருவாயே இல்லாவிட்டாலும் சொத்துவரி உண்டு. அதேபோல, சொத்துக்கு தேய்மானத்துக்கான தள்ளுபடியும் உண்டு.

உதாரணமாக, எனக்கு ஒரு வீடு இருக்கிறது. அதில் நான் குடியிருக்கிறேன், அல்லது வாடகைக்கு விட்டிருக்கிறேன், அல்லது பூட்டியே வைத்திருக்கிறேன். எப்படி வைத்திருந்தாலும் அதற்கு சொத்து வரி உண்டு. ஏனென்றால், சொத்துவரியைக் கொண்டுதான், அந்தப் பகுதிக்கான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, சாக்கடைவசதி உள்ளிட்ட குடிமை வசதிகள் தரப்படுகின்றன. உங்கள் வீட்டில் நீங்கள் குடியிருந்தாலும் சரி, வாடகைக்கு விட்டிருந்தாலும் சரி, சும்மா பூட்டி வைத்திருந்தாலும் சரி, அந்தப் பகுதிக்கு இந்தச் சேவைகள் எல்லாம் கிடைத்தாக வேண்டும்.

எந்தெந்த வீட்டில் ஆள் இல்லை, எந்தெந்த வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள் என்று பார்த்துப் பார்த்து, பயன்படுத்தப்படும் காலத்துக்கு மட்டும் சொத்து வரி விதிக்க முடியாது. அப்படிச் செய்வதாக இருந்தால், நம் மக்கள் அதிலும் வேலையைக் காட்டி விடுவார்கள். வரிக்கணக்கு எடுக்க வரும்போது வீட்டைப் பூட்டி வைத்துவிட்டு, இங்கே யாரும் இல்லை, அதனால் சொத்துவரி கூடாது என்று சொல்லி விடுவார்கள். சரிதானே?

அதனால்தான் சொத்துவரி என்பது, அந்தந்தப் பகுதியின் மனை விலை மதிப்பு, கட்டுமானம், அதன் வருவாய் ஆகிய பல விஷயங்களின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது. அதற்கென்று ஒரு சூத்திரம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் கூகுளில் தேடிப் பார்க்கலாம். கல்யாண மண்டபங்களுக்கு தனி சூத்திரம் உண்டு. பஸ் ஸ்டாண்ட் / ரயில் நிலையம் / மார்க்கெட் பக்கமா, ஆண்டுக்கு எத்தனை திருமணங்கள் அதில் புக் செய்யப்படுகின்றன என்பதெல்லாம் வைத்து கணக்கிடப்படுகிறது.

ரஜனியின் கல்யாண மண்டபத்துக்கான சொத்து வரி பாக்கி எவ்வளவு என்று ஒரு படத்தைப் பார்த்தேன். உடனே மேலும் தோண்டிப் பார்த்தேன். நிறைய கேள்விகள் எழுகின்றன.

1. நான் அறிந்தவரையில், ரஜனியின் கல்யாண மண்டபம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. எப்போதிருந்து என்று தெரியாது. ஆனால், சொத்துவரி நோட்டீசின் அடிப்படையில் பார்த்தால், 2018இல்தான் கட்டப்பட்டது என்று காட்டுகிறது. இது மிகப்பெரிய வியப்பளிக்கும் செய்தி.

2. சொத்துவரி நோட்டீசின் கணக்குப்படி, அதன் பில்ட்-அப் ஏரியா என்பது கிரவுண்ட் ஃப்ளோர் 250 சதுர அடி. அதாவது, சுமாராக வெறும் 15 அடி x 17 அடி அகலக் கட்டிடம்தான்! இது வியப்பளிப்பது மட்டுமல்ல, அதிர்ச்சி தருவதும்கூட.

3. இதுவரை ரஜனியின் கல்யாண மண்டபத்துக்கு செலுத்திய சொத்துவரி எவ்வளவு, எப்போது எவ்வளவு வரியாக செலுத்தப்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தேன். 2020 வரை கச்சிதமாக, ஒருமுறைகூட தவறாமல், ஃபைன் ஏதும் இல்லாமல் செலுத்தி வந்திருக்கிறார்கள். சுமார் 25 ஆண்டுகளில் செலுத்தப்பட்ட வரி 1 கோடி ரூபாய்.

1993-94 முதல் 98 வரை - 6 மாதங்களுக்கு 66,422 ரூபாய்

1998-99இல் 2006 வரை - 6 மாதங்களுக்கு 97,871 ரூபாய்

2006-07 முதல் 2018 வரை - 6 மாதங்களுக்கு 2,31,397

2018-19 முதல் 2021 வரை - 6 மாதங்களுக்கு 6,49850.

மேற்கண்ட விவரங்களைப் படிக்கும்போது, சொத்துவரி விகிதம் உயர்ந்து விட்டதாக யாரும் நினைத்து விட வேண்டாம்.

இதைத் தோண்டப்போகத் தெரிய வந்த இன்னொரு விஷயம் - சென்னையின் சொத்துவரி விகிதம் கடைசியாக முடிவு செய்யப்பட்டது 1998இல். கடந்த இருபது ஆண்டுகளில் சொத்துவரி அதிகரிக்கப்படவே இல்லை! சொத்துவரியை அதிகரிப்பது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் 2017இலேயே கண்டித்து, விரைவாக நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறது. ஆனால் இதுவரை ஏதும் நடைபெறவில்லை.

1993இல் பயன்பாடு குறைவாக இருந்ததால் 66 ஆயிரமாக வரி இருந்திருக்கலாம். பயன்பாடு அதிகமானதால் 2018இல் 6 லட்சமாக உயர்ந்திருக்கலாம்.

சொத்துவரி இரண்டு தவணைகளுக்கு நிலுவையில் இருக்கிறது. இப்போதைய சொத்துவரி பாக்கி 6,49,000 அல்ல. 12,95,000. (இதில், கடைசியாகச் சொன்ன 649850 ரூபாய் என்பதில் எதற்கோ 5000 ரூபாய் தள்ளுபடியும் கிடைத்திருக்கிறது. )

மேலே சொன்ன மூன்று விஷயங்களையும் வைத்துப் பார்த்தால், கல்யாண மண்டபத்துக்கு சொத்துவரியைக் குறைப்பதற்காகவே கட்டிடப் பரப்பைக் குறைத்துக் காட்டியிருக்கிறார்கள் என்ற சந்தேகம் வருகிறது. கல்யாண மண்டபத்தின் ஒரு படம் மட்டும் கீழே தந்திருக்கிறேன். ஒன்று, இவ்வளவு பெரிய கட்டிடத்தை வெறும் 250 சதுர அடியில் கட்டும் தொழில்நுட்பத்தை செயலாக்கிய ரஜனிக்கும் சென்னை மாநகராட்சியில் சிலருக்கும் சேர்த்து விருதளித்துப் பெருமைப்படுத்த வேண்டும்.

அல்லது, இதில் இன்னும் எவ்வளவு ஊழல் என்று ஆராய வேண்டும். அல்லது, நோட்டீசில் தவறு நேர்ந்து விட்டது என்று மாநகராட்சி நிரூபிக்க வேண்டும். இப்போது சொல்லுங்கள், சிஸ்டம் சரியில்லைதானே என்று கேட்டுள்ளார் ஷாஜகான்.