குஷ்பூவை விமர்சனம் செய்வதற்கு தகுதி இருக்கிறதா..? பா.ஜ.க.வின் எழுத்தாளர் மாலன் சொல்வதைக் கேளுங்கள்.

நடிகை குஷ்பு திடீரென கட்சி மாறிய விவகாரம்தான் பெரும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் நடிகை குஷ்புக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார் எழுத்தாளர் மாலன். அவர் கூறியிருக்கும் செய்தி இதுதான்.


காங்கிரசை எதிர்த்து அதிலிருந்து வெளியேறிய பெரியார் 1967 தேர்தலில் காங்கிரசை ஆதரித்ததை ஏற்றுக் கொண்டவர்கள், எமெர்ஜென்சியின் போது மிசாக் கைதிகளாக இருந்து பின் நேருவின் மகளை ஆட்சி செய்ய வரவேற்றதை ஏற்றுக் கொண்டவர்கள், பண்டாரம். பரதேசிகளின் கட்சி என பாஜகவை விமிர்சித்து விட்டு அதனோடு தேர்தல் உறவு கொண்டதை இன்று கண்டு கொள்ளாதவர்கள் 

வாரிசு அரசியலை வளர்க்கிறது திமுக எனக் குற்றம் சாட்டிக் கட்சியை விட்டு வெளியேறிய வைகோ இன்று அதே வாரிசுக்குப் பட்டம் சூட்ட முனைந்திருப்பதைப் பாராட்டுகிறவர்கள், கூடா நட்பு கேடாய் முடியும் என முழங்கி விட்டு அதே நட்பை இன்றும் பேணிக் கொண்டிருப்பவர்கள், அதை ஆதரிப்பவர்கள்,

இலங்கைத் தமிழருக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்து விட்டது என்று கண்ணீர் விட்டுப் பின் அதைத் துடைத்துக் கொண்டு சோனியாவின் தலைமையை ஏற்றவர்கள் 2014 தேர்தலின் போது திமுகவை ஊழல் கட்சி என்ச் சாடி, பின் 10 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு அதனோடு கூட்டணி வைத்திருப்பதைக் கண்டும் காணாதிருப்பவர்கள்,

கர்நாடகத்தில் குமாரசாமியைத் தேர்தலில் எதிர்த்துவிட்டு பின் அவருடனே சேர்ந்து ஆட்சியைப் பங்கிட்டுக் கொண்டதை ஏற்றுக் கொண்டவர்கள், மராட்டியத்தில் சிவசேனாவைத் தேர்தலில் எதிர்த்துவிட்டு, இன்று அதனுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்களை ஆதரிப்பவர்கள் தவிர - மற்றவர்கள் குஷ்பூவை விமர்சிக்க வாருங்கள். உங்களில் பாவம் செய்யாதவர் எவரோ அவர் முதல் கல்லை எறியுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அடேங்கப்பா, மாலனுக்கு எப்படியெல்லாம் கோபம் வருகிறது.