ராணிப்பேட்டை: போலீசார், மருத்துவர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை வாலாஜாபேட்டை பொதுமக்கள் கவுரவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள், போலீஸ், துப்புரவு தொழிலாளர்களை வீட்டுக்கு அழைத்து பாதபூஜை..! நெகிழ வைத்த வாலாஜா மக்கள்! ஏன் தெரியுமா?

போலீசார், மருத்துவர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் அயராது ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை கவுரவிக்கும் வகையில், வாலாஜாபேட்டையை சேர்ந்த மக்கள் ஒரு புதிய முடிவு செய்தனர். இதன்படி, வாலாஜாபேட்டை பெல்லியப்பா நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொரோனா வைரஸ் தடுப்புப் பிரிவில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் போலீசாரை பொதுமக்கள் அழைத்து வந்தனர்.
அவர்களை கவுரவிக்கும் வகையில் பாத பூஜை செய்தனர். முதலில், அனைவரையும் நாற்காலியில் அமர வைத்து கிருமிநாசினி உதவியுடன் கால்களை சுத்தம் செய்தனர். பிறகு, மஞ்சள், குங்குமம் வைத்து பாத பூஜை செய்து, கவுரவித்தனர். பொதுமக்களின் மரியாதையை டாக்டர்களும், போலீசார் மற்றும் சுகாதாரப் பணியாளர்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். அனைவரையும் ஆனந்த கண்ணீர் மல்க பங்கேற்ற இந்த நிகழ்வு, பலரையும் நெகிழ்ச்சியடைய செய்வதாக அமைந்திருந்தது.