11 மாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்க பொம்மைக்கும் சிகிச்சை! நெகிழ வைத்த டாக்டர்கள்!

சிகிச்சைக்கு ஒத்துழைக்காத 11 மாத குழந்தையை நூதன‌ முறையில் மருத்துவர்கள் கையாண்டு வருகின்றனர்.


ஜிக்ரா மாலிக் என்ற 11 மாத குழந்தை டெல்லியில் வசித்து வருகிறது. மொட்டை மாடியிலிருந்து குழந்தை தவறி கீழே விழுந்துள்ளது. அப்பகுதியிலுள்ள லோக்நாயக் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். ஆனால் குழந்தை சிகிச்சைக்கு சற்றும் ஒத்துழைக்கவில்லை. அங்கும் இங்கும் அலைந்து கொண்டு மருத்துவர்களை மிகவும் சிரமப்படுத்தியது.

எவ்வாறு குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து மருத்துவர்கள் மிகவும் கவலையடைந்தனர். அப்போது குழந்தையின் தாயான ஃபரின் மருத்துவர்களிடம் அற்புதமான யோசனை ஒன்றை அளித்தார்.

அதாவது குழந்தை ஜிக்ராவுக்கு பிடித்தமான பொம்மை பாரியை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மருத்துவர்கள் முதலில் பாரிக்கு மருத்துவம் செய்வதாக திட்டமிட்டனர். இதனால் ஜிக்ராவும் ஒப்புக்கொண்டுள்ளாள். தற்போது மருத்துவர்கள் ஜிக்ராவுக்கு நல்ல முறையில் சிகிச்சையளித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது மருத்துவமனையிலுள்ள அனைவரையும் நெகிழ செய்துள்ளது.