காதில் ஆப்பரேசனுக்கு அட்மிட்டான சிறுமி..! தொண்டையை அறுத்த டாக்டர்கள்..! சர் இவான் ஸ்டெட்ஃபோர்டு ஹாஸ்பிடலில் பயங்கரம்!

மருத்துவர்களின் அஜாக்கிரதையால் காதில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக தொண்டையில் செய்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அம்பத்தூரில் "சர் இவன் ஸ்டெட்ஃபோர்டு" ("SIR IVAN STEDFORD")  என்ற அரசு உதவி பெறும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சென்னையிலுள்ள பட்டரவாக்கம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியொருவர் காது வலியால் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார். அவருடைய இரு பக்க காது மடல்களிலும் கட்டியிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அறுவை சிகிச்சையினால் மட்டுமே கட்டிகளை அகற்ற இயலும் என்றும் கூறியுள்ளனர். அதற்கு சிறுமியின் பெற்றோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

நேற்று காலையில் அந்த சிறுமிக்கு அறுவைசிகிச்சை செய்யப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த செவிலியர்களின் அஜாக்கிரதையால் அறுவை சிகிச்சைக்கு பதிலாக, தொண்டை அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அனுப்பப்பட்ட பிறகு சிறுமியின் உறவினரான செவிலியர் ஒருவர் இதனை கண்டுபிடித்து முறையிட்டுள்ளார். 

அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் மருத்துவர்களிடம் கேட்ட போது, அவர்கள் முதலில் மறுத்துள்ளனர். அதன்பின் வேறு வழியின்றி தவறாக அறுவை சிகிச்சை நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகிகளுடன் பெரும் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அந்த சிறுமிக்கு தொண்டை பகுதியில் லேசர் அறுவை சிகிச்சை மூலம் சதைகளை வெளியே எடுத்துள்ளனர். ஒருவழியாக உறவினர்களை சமாதானப்படுத்தி மருத்துவமனையிலிருந்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு மருத்துவ நிர்வாகத்தினர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.