தி.மு.க. பிரமுகரான டாக்டர் ஆனந்த் திடீர் தற்கொலை! நளினி சிதம்பரத்திற்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

திமுக மருத்துவரணி அமைப்பாளரான மருத்துவர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இதனருகேயுள்ள சுல்தான்பேட்டை எனுமிடத்தில் கண், காது, மூக்கு மருத்துவராக டாக்டர் ஆனந்த் பணியாற்றி வந்தார். 

இவர் இன்று காலையில் வெளிநோயாளிகளை மருத்துவமனையில் சந்தித்தார். அவருக்குக் கீழ் 3 பெண்கள் எப்பொழுதும் பணியாற்றுவர். அவர்களுக்கு மாதாமாதம் 5-ஆம் தேதியன்று சம்பளம் தந்துவிடுவார். ஆனால் இன்றே அவர்களுக்கு ஆனந்த் சம்பளம் தந்துள்ளார்.

இதனைக் கேட்ட அவர்களிடம்," நான் தானே தருகிறேன். தைரியமாக வாங்கிக்கொள்ளுங்கள். இனிமேல் வெளி நோயாளிகளை கவனிக்க மாட்டேன்" என்று கூறிவிட்டு அவருடைய பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். அவருடைய பெரியப்பா மகனுக்கு அழைப்பு விடுத்து தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். உடனடியாக உறவினர்களை அழைத்துக்கொண்டு பெரியப்பாவின் மகன் பண்ணை வீட்டிற்கு சென்றார்.

உறவினர்கள் வருவதை கண்ட ஆனந்த் நாட்டுத்துப்பாக்கியால் கழுத்தில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் அறிந்த காவல்துறையினர் பண்ணை வீட்டிற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த ஆனந்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர் நாமக்கல் மாவட்டம் திமுக மருத்துவ அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் ஆனந்த் நளினி சிதம்பரத்தின் தூரத்து உறவினர் என்றும், அவருக்கு அமலாக்கப்பிரிவில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல் உலா வருகிறது. அதற்காக தற்கொலை செய்துகொண்டாரா என்ற ரீதியிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.