கொரோனா காலத்தில் பள்ளியைத் திறக்கத்தான் வேண்டுமா...? முதல்வருக்கு பெற்றோர் கோரிக்கை.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.


ஓரளவுக்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த ஜூலையில் இருந்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டுவிட்டன. பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது.

கோயில்கள் தொடங்கி சினிமா தியேட்டர், மதுபான பார்கள் வரை எல்லாம் வழக்கம்போல் செயல்படத் தொடங்கிவிட்டன. அங்கெல்லாம் மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகள் எதையும் பின்பற்றுவதில்லை. சுதந்திரமாக அவரவர் விருப்பத்துக்கு வலம் வருகின்றனர். 

அப்படியிருக்க தமிழகத்தில் பள்ளிகள் மட்டும் திறக்காமல் காலம் தாழ்த்த வேண்டாம் என்பதுதான் பலருடைய எண்ணமாக இருக்கிறது. அதாவது நாட்டில் உள்ல எல்லாவற்றையும் திறந்துவிட்டுவிட்டு, பள்ளிகளை மட்டும் திறக்காமல் இழுத்தடிப்பது ஏன் என்பது அவர்களின் கேள்வியாக இருக்கிறது. இந்த கேள்வி தந்த நெருக்கடியோ என்னவோ, பள்ளிகள் திறப்பு தொடர்பான கருத்துக் கேட்பை மாநில அரசு மீண்டும் தொடங்கியிருக்கிறது.

கொரோனா போன்ற பெருந்தொற்று அபாயம் முற்றிலுமாக நீங்காத நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்பது சரியல்ல. இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்து, மாணவர்களுக்கு பாதுகாப்பான ஒரு முடிவை அரசு எடுக்க வேண்டும் என்று பெற்ரோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பள்ளி திறந்தபின் கொரோனா தொற்று பரவினால், சக மாணவர்களையும் அந்த தொற்று பாதிக்கும். எனவே எல்லாவற்றையும் திறந்துவிட்ட பிறகு பள்ளிகளை மட்டும் பூட்டி வைத்திருப்பது ஏன்? என்பது வாதத்துக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். நடைமுறைக்கு நல்லதல்ல. 

எனவே எடப்பாடி அரசு இந்த நெருக்கடிக்குப் பணிந்துவிடக் கூடாது என்பதுதான் பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. விடுமுறை நாயகன் எடப்பாடி, இந்த ஆண்டு முழுவதும் விடுமுறையாக அறிவிக்கட்டும்.