மனு சாஸ்திரம் தேவைதானா.. பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.

மனு சாஸ்திரம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாவதும், பரபரப்பு அடங்குவதும் வாடிக்கை. மனு சாஸ்திரத்தை தடை செய்யவேண்டும் என்று திருமாவளவன் போராட்டம் நடத்தியிருக்கும் நிலையில், பேராசிரியர் ராமசாமியின் கருத்து இது.


மனு என்றொரு ஆள் இருந்ததில்லை; அவர் எழுதியதாகச் சொல்லும் ஸ்மிருதி ஒருவரால் எழுதப்பெற்றதில்லை எனப் பிராமணீயத்தையும், பிராமணர்களின் மேன்மையையும் அவர்களின் திறனையும் தகுதியையும் மெச்சிக்கொள்ளும் ஆட்கள் இப்போதும் வாதிடுவார்கள். ஆனால் மனு என்ற சொல்லும் அச்சொல்லால் உருவகப்படுத்தப்படும் கருத்தியலும் அதன் செல்வாக்கும் நீண்ட நெடுங்காலமாக இந்தியப் பரப்பில் இருந்துகொண்டே இருக்கிறது. சம்ஸ்க்ருத மரபுக்கு எதிராக முன்வைக்கப்படும் தமிழ் அடையாள அரசர்கள் காலத்திலும் அச்சொல்லும் அதன் செல்வாக்கும் அதிகமானதேதவிரக் குறைந்ததில்லை. 

மனு என்ற சொல்லும் அதன் வழியான கருத்தியலும்தான் பிராமணர்களுக்கு உடல் உழைப்பை உடமையாக்காமல், மூளையை மட்டும் பயன்படுத்துபவர்கள் என்ற தகுதியைத் தந்தது. அச்சொல்தான் மனிதர்களிடையே பிறப்பு அடிப்படையில் உயர்வு - தாழ்வைக் கற்பித்தது. இந்திய மனிதக்கூட்டத்தைப் படிநிலை அடுக்காக்கி உச்ச இடத்தை உறுதிசெய்து தொடர்ச்செய்தது.

அச்சொல்லின் வழியாகவே உடல் உழைப்பில் ஈடுபடும் பெரும்பான்மை மக்களைத் தீட்டானவர்கள் - அழுக்கானவர்கள் - தொடக்கூடாதவர்கள் என ஒதுக்கிவைக்கும் வன்முறையைத் தூண்டியது. மனிதர்க் கூட்டத்தில் பாதியாக உள்ள பெண்களைப் பண்டமாக - பொருளாக- சேவகிகளாகச் சித்திரித்து அடக்கிவைக்கத் தூண்டியது. ஒரு சொல் -வினையாக - செயலாக இருக்கும்போது உண்டாக்கும் விளைவைவிடப் பெயர்ச்சொல்லாக -கருத்தாகத் தொடரும்போது உண்டாக்கும் விளைவுகள் பெரிதினும் பெரிது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் சொல் அது.

இந்திய வாழ்க்கையில் துடைத்து எறியப்பட வேண்டிய ஒருசொல் எதுவெனக் கேட்டால் மனு என்று தயங்காமல் சொல்லலாம். அச்சொல்லும் அதன் கருத்தும் அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளும் இல்லாமல் ஆக்கப்படவேண்டும் என ஒருத்தர் குரல் எழுப்பினால், அவர்தான் இந்திய ஆளுமை; இந்தியாவிற்கு வழிகாட்டி என்று திருமாவளவனை பாராட்டி இருக்கிறார்.