தமிழகத்தை ஏன் பெரியார் மண் என்று பெருமையுடன் பேசுகிறார்கள் தெரியுமா?

தமிழகத்தை பெரியார் மண் என்று தான் பெருமையுடன் பேசுகிறார்கள். பெரியார் மண் என்னும் சொல்லாடல் ஏன் என்பதை விளக்குகிறார் பேராசிரியர் அ.ராமசாமி.


பிராமணியத்தன்னிலையைக் கைவிடுதல் இங்கு பலருக்கும் முடியாத ஒன்றாக இருக்கிறது. பிறப்பின் வழியாகவே பிராமணர்கள் என நினைத்துக் கொள்பவர்களுக்கும், வேறு வர்ணத்தில் பிறந்து பிராமணியத்தன்னிலை நோக்கிப் பயணிப்பதாக நினைப்பவர்களுக்கும் நிகழ்காலப் பகையாக இருக்கும் பெயர் ஈ .வெ. ராமசாமி. நீண்டகாலப் பகையாக இருக்கும் பெயர் கௌதம புத்தர். 

பிராமணியம் என்பது நபர்கள் அல்ல. அதுவொரு கருத்துருவாக்கம். உருவாக்கப்பட்ட கருத்தின் வழியாகத் தன்னைப் பெரும்பான்மைக் கூட்டத்திலிருந்து விலக்கி வைத்துக்கொண்டு புனிதம் x தீட்டு என்ற இரட்டை எதிர்வின் வழியாக நகர்ந்துகொண்டிருக்கிறது என்று விளக்குபவர்கள் புத்தரை முதன்மையாக நினைக்கிறார்கள். சனாதனம், வர்ணப்பாகுபாடு என்பனவற்றைத் தீர்மானிப்பதில் இரட்டை எதிர்வு மனம் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.

மேல் கீழ் எதிர்வுநிலையை ஏற்றுக் கொண்ட பார்வை, நாட்யதர்மிx லோக்தர்மி , வேத்தியல் பொதுவியல் , செவ்வியல் இலக்கியம் நாட்டாரியல் இலக்கியம், அக்கிரகாரப்பண்பாடு சேரிப்பண்பாடு என நீண்டுகொண்டே இருக்கும் எனச் சொன்னதின் வழியாக - பரப்புரை செய்ததின் வழியாகத் தன்னைப் பிராமணியத்தின் எதிரியாகக் கட்டமைத்துக் கொண்டவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி

எல்லாவற்றையும் இரட்டையாகப் பார்ப்பது சிக்கலானது என்றாலும் அப்படிப்பார்க்கும்படி உண்டாகும் நெருக்கடியிலிருந்து தமிழகம்/ இந்தியா விலகி விடாமல் தவிக்கிறது. அந்தத் தவிப்பு சரியா? தவறா? என்பதை நிகழ்வுகளின் முடிவுகள்தான் சொல்கின்றன. முன்கூட்டிய கணிப்புகள் எப்போதும் தவறாகி விடுகின்றன. இதனைத் தமிழ்நாட்டின் தனித்துவம் என்றுதான் சொல்லவேண்டும். இங்கே இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என வாதம் செய்பவர்கள் தங்களின் கண்களுக்குப் பக்கப்பட்டை போட்டுக்கொண்டு பயணிப்பவர்களாக இருக்கலாம். இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என்பதைவிட இரட்டை எதிர்வாகவே தமிழ்மனம் இயங்குகிறது

அண்மைக்கால நிகழ்வுகளான மாடுபிடிப் போட்டி தொடங்கி மாவுப் பொட்டலம் வரை எதிரெதிர் முனைகளாகப் பிரிந்துவிடும் லாவகம் இங்கே தன்னெழுச்சியாக உருவாகிவிடுகிறது. ஆண்டாள் பாடல், ராஜராஜசோழன் எனப் பண்பாட்டுக் குறியீடுகள் மட்டுமல்லாமல் காவிரியில் தண்ணீர், முல்லைப் பெரியாரில் அணை, மருத்துவக் கல்விக்கான மையப்படுத்தப் பெற்ற பொதுத்தேர்வு, நாடு தழுவிய வரிவிதிப்புக் கொள்கை, சென்னையில் தொழிற்பெருக்கம், மதுரையில் ஆய்வுக் கூட மருத்துவமனை, திருப்பூரில் சாக்கடைப் பெருக்கம், வந்துவிட்ட கல்விக் கொள்கை, வேளாண்மையைக் கைவிட்டுவிட்டுத் தொழிற்சாலைகளைச் சார்ந்த வாழ்க்கை எனப் பொருளியல், கல்வி, உடல்நலம், சூழல் நடவடிக்கைகள் பற்றிய பேச்சு என்றாலும் இந்த இரட்டை எதிர்வு தவிர்க்க முடியாமல் உருவாகி விடுகிறது. உருவாக்கப்படும் இரட்டை எதிர்வில் எப்போதும் ஒரு தரப்பாகப் பிராமணர்கள் இருக்கிறார்கள். 

பிராமணர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆனால் அவர்கள் பலம் வாய்ந்த தரப்பாக - கருத்தியல் பலம் வாய்ந்த தரப்பாக இருக்கிறார்கள். அந்தத் தரப்பின் முன்மொழிவுகளை விவாதிக்கும் தரப்புகளாகவே மற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எடுக்க வேண்டிய சார்பைத் தீர்மானித்த இடத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் நிலைபாடு முன்னிற்கிறது. பிராமணர்கள் எதனை ஆதரிக்கிறார்களோ, அதற்கெதிரான நிலைபாட்டை மற்றவர்கள் எடுக்கவேண்டும் என்று கற்றுத் தந்து விட்டுப் போயிருக்கிறார் அவர்.

அதுவே பெரியாரின் மண் என்ற சொல்லாடலின் பின்னிருக்கும் எடுகோள். இதனை உள்வாங்கிய நிலைபாட்டோடு பேசும் பேச்சுகள்தான் ‘பெரியார் மண்’ என்ற சொல்லாடலின் தளவிரிவு. அதல்லாமல் கடவுளை மறுத்ததையும் சமயக் குறியீடுகளைக் கேள்விக்குள்ளாக்கி பேசியனவற்றையும் பெரியாராகக் கணித்தால் திசைமாற்றமே ஏற்படும். பெரியாரைக் கடவுள் மறுப்பாளராக மட்டும் முன்வைப்பதில் இருக்கும் உள்நோக்கம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 

60 ஆண்டுகாலத் திராவிட இயக்கங்களின் ஆட்சியில் கோயில்களும் சடங்குகளும் நம்பிக்கைகளும் கூடியுள்ளன. அதுவே பெரியாரின் தோல்வியைக் காட்டுகின்றன என்று பேசி இது பெரியாரின் மண் அல்ல என்ற கருத்தை உருவாக்கும் முயற்சிகளின் பரப்புரைகள் அவை. மாநிலக் கட்சியா? தேசிய கட்சியா? என்ற பார்வையை விடவும் இதன்வழி உண்டாகும் பலனை அடையப்போகிறவர்கள் யார்? என்ற கேள்வியை முன்வைத்தே சொல்லாடல்கள் தமிழ்நாட்டில் உருவாகிறது.

நிகழ்வொன்றைக் கணிக்கும்போது எந்த வர்க்கத்தின் சார்பாக இருக்கப் போகிறது என்று கணிக்கவேண்டும். அதில் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் பக்கம் நிற்பது முக்கியம். பிராமணியம் ஒரு வர்க்கம்; அது பொருளியல் நடவடிக்கைகளை வெளிக்காட்டாமல் பண்பாடு, கலை, அழகியல், தத்துவம் என மேற்கட்டுமானங்களில் மட்டுமே இயங்குவதாகப் பாவனை செய்யும் வர்க்கம். பிராமணியம் என்பது ஆளும் வர்க்கத்தின் அதிகாரக்கண்ணி எனப் புரியத்தொடங்கினால் குழப்பங்களின் மீது வெளிச்சம் பரவலாம். அந்த வெளிச்சக்கதிர்களை- உருவாக்கிய -பரப்பிய- சொல்லாக இருக்கிறது பெரியார் மண் என்ற சொல்லாடல்.