அடுத்த பிள்ளையுடன் உங்கள் பிள்ளையை ஒப்பிட்டுப் பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

மதிப்பெண் குறைவான பெற்ற பிள்ளையை, ஏன் குறைந்த மதிப்பெண் வாங்கியிருக்கிறாய் என்று சொல்லி அடித்தாலும், திட்டினாலும் வாங்கிக்கொள்ளும். அதே நேரம் பக்கத்துவீட்டு பாலு உன்னைவிட கூடுதல் மார்க் வாங்கியிருக்கிறான், உனக்கு எங்கே அறிவு போச்சு என்று ஒப்பிட்டுத் திட்டினால், மாணவனுக்கு சுர்ரென்று ரோஷம் வரும். அந்த ரோஷத்தால் கோபமும், துவேஷமும், எரிச்சலும், படிப்பின் மீது வெறுப்பும் வரும்.


ஒவ்வொரு குழந்தையும் ஒரு ரகம். யாரும் தன்னைவிட பெரியவர் என்று குழந்தைகள் நினைப்பதில்லை. ஆனால், தொடர்ந்து பெற்றோர் பக்கத்துவீட்டுப் பிள்ளைகளுக்கு அதிக அறிவு இருக்கிறது என்ற ரீதியில் மீண்டும் மீண்டும் சொல்லும்போது தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறது. 

தனக்கு படிப்பு சரியாக வராது என்று நினைத்துக்கொண்டு, தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறது. அந்தக் குழந்தைக்கு எத்தனை சிறப்பாக சொல்லிக்கொடுத்தாலும் படித்து, நல்ல மதிப்பெண் பெறுவதற்குத் தெரியாது. தன்னையே மட்டம் தட்டிக்கொள்ளும். தான் எந்த வெற்றிக்கும் லாயக்கு இல்லை என்று நினைத்துக்கொண்டு மனநல பாதிப்புக்கும் ஆளாகலாம்.

ஆகவே, எந்தக் காரணம் கொண்டும் பிள்ளைகளை வேறு ஒரு பிள்ளையுடன் ஒப்பிட்டுத் திட்டவே செய்யாதீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறமை, தனித்தன்மை உண்டு என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.