தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? எடப்பாடி பழனிசாமி கொடுத்த எச்சரிக்கை.

கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம், நில அபகரிப்பு போன்றவை தி.மு.க. ஆட்சியில் மட்டுமே நடக்கும். அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் அச்சமின்றி வாழ்கிறார்கள் என்று தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


இதுகுறித்து பேசிய முதல்வர், இப்போது கட்ட பஞ்சாயத்து, ரௌடியிஸம் ஆகியவை கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகம் தான் நோட்டை எடுத்துச் சென்று கடைகடையாக வசூல் செய்வார்கள், இப்போது அந்த நிலை கிடையாது. வியாபாரிகள் அச்சமில்லாமல் வியாபாரம் செய்கிறார்கள். 

திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன் ஒரு ஓட்டலுக்கு சென்று நன்றாக சாப்பிட்டு, அதற்குண்டான பணத்தை ஓட்டல் உரிமையாளர் கேட்டதற்கு, ஓட்டல் உரிமையாளர் மூக்கில் குத்துகிறார். அடுத்தாக, திராவிட முன்னேற்றக் கழகத்தில் திரு.ஸ்டாலின் அவர்கள் உணவு விடுதிக்குச் சென்று கட்டப் பஞ்சாயத்து செய்கிறார். ஆக, இவர் எப்படி நாட்டை ஆளமுடியும்?

ஆட்சி அதிகாரம் இல்லாதபோதே இப்படிப்பட்ட ரௌடித்தனத்தில் ஈடுபடுகிறபோது, ஆட்சி அதிகாரம் கையிலிருந்தால், வியாபாரிகள் நிம்மதியாக வியாபாரம் செய்ய முடியுமா? திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு அராஜகக் கட்சி. அதுமட்டுமல்ல, பெரம்பலூர் அருகே ஒரு அழகு நிலையத்தில் புகுந்து, பெரம்பலூர் முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அந்த பெண்மணியை காலால் போட்டு மிதிக்கிறார், அந்தப் பெண் கதறுகின்ற காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தோம். 

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அதேபோல, கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு ஒரு கர்ப்பிணிப் பெண் ரயிலில் பயணம் செய்கிறார்கள். அதே ரயிலில் திமுக ஒன்றியச் செயலாளர், திமுக நிர்வாகிகளும் பயணம் செய்கிறார்கள். அப்போது, அந்த திமுக நிர்வாகி கர்ப்பிணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததற்காக, அந்தப் பெண்மணி காவல் நிலையத்தில் புகார் செய்து, அவர்களை சிறையில் அடைத்து, இப்போது அவர் ஜாமீன் வெளியில் வந்திருக்கிறார். 

அதேபோல, திமுக நிர்வாகி தேங்காயை வாங்கிவிட்டு, அதற்குண்டான பணத்தைக் கேட்டால் அந்த கடையின் பெண் உரிமையாளரை அடிக்கிறார். செல்போன் கடைக்குச் சென்று, செல்போன் வாங்கிவிட்டு, அதற்குண்டான பணத்தை கேட்டால் அவர்களை அடிக்கிறார்கள். மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்களென்றால், ஆட்சி அதிகாரத்திற்கு இவர்களால் வரமுடியாது, அப்படி தப்பித்தவறி வந்தால், நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்பதை மட்டும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.