டீன் ஏஜில் வயதினர் சிகரெட் பிடிக்க ஆசைப்படுவது ஏன்?

பதின் பருவம் எனப்படும் துடிப்பான வயதினர்கள், எப்படிப்பட்ட தீய பழக்கங்களுக்கு ஆளாக வாய்ப்பு இருக்கிறது என்பதையும், அதில் இருந்து எப்படி அவர்களைக் காப்பாற்றுவது என்பதையும் பார்க்கலாம்.


டீன் ஏஜ் வயதினர் தங்களை ஒரு வளர்ந்த ஆண் அல்லது பெண் என்றுதான் நினைத்துக்கொள்வார்கள். தாங்கள் இன்னமும் குழந்தை அல்ல என்பார்கள். அதனால் கண்ணில் காணும் அனைத்தையும் பரிட்சை செய்து பார்க்க மனசு துடிக்கும். புகை, மது, செக்ஸ் போன்றவை ஆர்வத்துடன் இழுக்கும்


இவை எல்லாமே கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கின்றன. மேலும் இதனை வாங்கிக்கொடுக்க எத்தனையோ பேர் தயாராகவும் இருக்கிறார்கள். அதனால் எளிதில் இந்தப் பழக்கங்களில் விழுந்துவிட வாய்ப்பு உண்டு.

இதுபோன்ற பழக்கத்தில் விழுந்துவிட்டார்கள் என்றதும் அடித்து உதைத்து திருத்தப் பார்ப்பது உரிய பலன் தருவது இல்லை.


தடுக்கத்தடுக்க அந்தப் பொருட்கள் மீது ஆர்வம் அதிகமாகத்தான் தெரியும். பெற்றோர்களுக்கு இந்தப் பழக்கம் இல்லை என்றால்தான் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லவே தகுதி உடையவர்களாக இருப்பார்கள். அதனால் முதலில் அவர்களிடம் இதுபோன்ற பழக்கங்கள் இருந்தால் விட்டொழிக்க வேண்டும்.  

இளைய வயதினரை வேறு பக்கம் திசை திருப்புவதுதான், இந்தப் பழக்கங்களில் இருந்து அவர்களை தப்புவிக்கும் சரியான வழி. இவர்களுக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஆர்வம் ஊட்ட்லாம். இசை, நாட்டியம், கராத்தே போன்றவைகளை கற்றுக்கொள்ளச் செய்வது, ஃபேமிலி டூர் செல்வது என்று எந்த நேரமும் சுறுசுறுப்பாகவே வைத்திருக்க வேண்டும்.


அவர்களிடம் திக்காக இருக்கும் நட்பு வட்டாரம் மூலம், இந்தப் பழக்கத்தின் தீமை குறித்து எடுத்துச்சொல்ல வேண்டும். இந்தப் பழக்கங்களால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை எத்தனை தூரம் அழுத்திச் சொல்கிறோமோ, அந்த அளவுக்கு வெளியே வருவார்கள். ஆனால்,இதனை சொல்லும் நபர்தான் சரியானவராக இருக்கவேண்டும்.