காஷ்மீர் விவகாரத்தில் அம்பேத்கர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்ததை அம்பேத்கர் விரும்பவில்லை என்றும், கடுமையாக எதிர்த்தார் என்றும் இணையத்தில் செய்திகள் உலாவருகின்றன. உண்மையில் அம்பேத்கர் மனநிலை காஷ்மீர் விவகாரத்தில் எப்படியிருந்தது தெரியுமா?


ஒரு தனி நாடு மனோ நிலையில் காஷ்மீரை விட்டு வைக்க டாக்டர்.அம்பேத்கர் கடைசி வரை விரும்பவில்லை. பாதுகாப்பு, நிதி அளிப்பு உள்ளிட்ட முக்கியபொறுப்புக்களை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டு இந்தியாவுக்கு நிகரான ஒரு தனி நாட்டுத் தகுதியோடு ஜம்மு- காஷ்மீர் திகழ்வதை டாக்டர்.அம்பேத்கர் தொடர்ந்து சாடினார்.

இந்திய ஒருமைப்பாடு, இந்திய பாதுகாப்பு, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கும் சிற்பி என்கிற நிலையில் இருந்து அவருடைய பார்வை அமைந்து இருந்தது. அந்த வகையில் ஒருபோதும் விட்டுக் கொடுக்காமல் சிந்தித்தவர், டாக்டர்.அம்பேத்கர்.

‘இந்தியா காஷ்மீரின் எல்லையை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள், இந்தியா உங்களுக்கு உணவு, தானியங்களை அளிக்க வேண்டும் என்கிறீர்கள், சாலை மற்றும் அடிப்படை வசதிகளை உருவாக்கி தரவேண்டும் என்கிறீர்கள். ஆனால் இந்தியாவுக்கு குறைந்த அதிகாரமே இருக்க வேண்டும், இந்தியர்களுக்கு காஷ்மீரில் உரிமை இல்லை என்கிறீர்கள்.

இந்த நாட்டின் சட்ட அமைச்சராக ,காஷ்மீருக்கு சட்ட பிரிவு 370ன் கீழ் சிறப்பு அந்தஸ்திற்கு நான் ஒப்புதல் கொடுப்பது இந்த நாட்டின் நலனுக்கு எதிராக நான் செய்யும் துரோகம். நான் எப்போதும் இதற்கு உடன்படமாட்டேன்’ என்றார்- டாக்டர். அம்பேத்கர்.

ஆனாலும், அவருடைய ஒப்புதலின் பேரில்தான் காஷ்மீர் தனிச்சிறப்புடன் இதுவரை இயங்கி வந்தது என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்!