2018 சிறந்த இசையமைப்பாளர் விருது யாருக்குன்னு தெரியுமா?

டைம்ஸ் தமிழ் நியூஸ் சார்பாக இரண்டாவது ஆண்டாக சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2018ம் ஆண்டுக்கு விருதுபெறும் சிறந்த திரைப்பட கலைஞர்களை அறிவிப்பதில் டைம்ஸ் தமிழ் பெருமைப்படுகிறது. இந்த விருதுக் கலைஞர்களை தேர்வுசெய்யும் குழுவில் சினிமா இயக்குனர்கள், நடிகர்கள், திரைப்பட விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.


தேர்வுக்குழுவினரால், ஒவ்வொரு விருதுக்கும் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். டிசம்பர் 30ம் தேதி விருது பெறும் கலைஞர்களின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்படும். இன்று 2018ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் யார் என்பதைப் பார்க்கலாம். .

சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இந்த ஆண்டு ஏராளமான புதியவர்கள் தென்படுவது தனிச்சிறப்பு. தமிழ் சினிமாவுக்கு நல்ல காலம் என்றும் சொல்லலாம். இளையராஜா அல்லது ரஹ்மான் என்று மட்டுமே இருந்துவந்த தமிழ் சினிமாவை புதுமுக இளைஞர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். ஆனாலும் மக்கள் ரசனை அடிப்படையில் இன்னமும் ரஹ்மானுக்குத் தனியிடம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு சர்கார் படமே சாட்சி.

தமிழகத்தை தன்னுடைய புரட்சிப் பாடல்களால் கலக்கிய சந்தோஷ் நாராயணன் இந்த ஆண்டு இசைக்கு முக்கியப் பங்காற்றி இருக்கிறார். காலா படத்தில் இவரது பாடல்கள் எல்லாமே எழுச்சியூட்டும் விதத்தில் அமைந்திருந்தது. இதற்கு நேர்மாறாக தென்றல் போன்று ஒரு படத்துக்கு இசை வழங்கியிருந்தார் கோவிந்த் வசந்தா.

தமிழில் அசுரவதம் மூலம் கோவிந்த் சினிமாவுக்கு அறிமுகம் என்றாலும் இரண்டாவது படமே அவரது புகழை உச்சத்துக்கு கொண்டுபோனது. இவர் மணிரத்னத்தின் அடுத்த தயாரிப்புக்கு இசையமைப்பாளர் என்பதும், சமீபத்தில் வெளிவந்துள்ள சீதக்காதி படத்தின் இசையமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயம்.

அடுத்து இந்த ஆண்டு இசையில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் இசையமைப்பாளர் குலேபகாவலி படத்தின் இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக்  மெர்வின். இந்த ஆண்டின் மெகா ஹிட் பாடல்கள் என்று குலேபகாவலியை சொல்லமுடியும். ஏராளமான ஆல்பங்களும் இசைத்துள்ளனர். வடகறி படத்தில் அறிமுகமான விவேக் மெர்வின், டோரா படத்தின் மூலம் புகழுக்கு வந்தார்கள்.

ஆக, 2018ம் ஆண்டுக்கு உரிய சிறந்த இசையமைப்பாளர் தமிழ் டைம்ஸ் விருதுக்கு இந்தப் பட்டியலில் இருந்து இரண்டு பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். கோவிந்த் வசந்தா மற்றும் விவேக் மெர்வின் ஆகிய இருவர்தான் தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர்கள். இந்த இரண்டு பேரில் இருந்து ஒருவர் மட்டுமே டைம்ஸ் தமிழ் விருதுபெற இருக்கிறார்.

இந்த இருவரில் யார் வெற்றி பெறுகிறார் என்பதை டிசம்பர் 30 அன்று அறிந்துகொள்ளுங்கள்.