சிறையில் சசிகலா என்ன மொழி படிக்கிறாங்கன்னு தெரியுமா?

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா ஓய்வு நேரங்களில் என்ன செய்துவருகிறார் என்று தெரியுமா?


   சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சசிகலா. சிறைக்குள் இருந்து ஷாப்பிங் சென்ற பெருமையெல்லாம் நமது சசிகலாவுக்கு மட்டுமே உண்டு. இன்று அவர் சிறைக்குள் என்ன செய்கிறார், எப்படி இருக்கிறார் என்று சிறைத் துறை வட்டாரத்தில் விசாரணை செய்தோம்.

     சென்னை வருமான வரித்துறை உதவி ஆணையர் வீரராகவன் தலைமையில் ஒரு பெண் உட்பட சில அதிகாரிகள் கடந்த வாரம் நடத்திய விசாரணையில் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டாராம். சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைகூட இப்படி இல்லை என்று நொந்துகொண்டார். அதனால் யாருமே மாட்டிவிடக் கூடாது என்ற விழிப்புடன் மிகவும் யோசித்து யோசித்து தப்பாக பதில் சொன்னாராம்.

   அனைத்துக் கேள்விகளுக்கும் ஞாபகம் இல்லை, தெரியவில்லை, நினைவில் இல்லை என்றே பதில் சொன்னாராம். இப்படி சொல்வதால் எந்த விதத்திலும் சசியை குற்றவாளிப் பட்டியலில் சேர்க்க முடியாதாம். அன்று ஜெயலலிதா படத்தைக் காட்டியிருந்தால்கூட, இவரை ஞாபகம் இல்லை என்றுதான் சொல்லி இருப்பார் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் சிரிக்கிறார்கள்.



    ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் இரண்டு நாட்கள் கேட்கப்பட்டதில் ஐம்பது கேள்விகளுக்கும் உள்ளாகத்தான் பதில் சொல்லியிருக்கிறாராம். அந்தக் கேள்விகளும், அவரது உறவினர்கள் பற்றிய தகவல்தானே தவிர, விசாரணைக்கு உதவுவது இல்லை என்கிறார்கள். அதனால் விசாரணை இன்னமும் முடிவடையவில்லையாம். நன்றாக யோசித்து வையுங்கள், மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வருவோம் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அதனால் சசிகலா அப்செட் ஆகியிருக்கிறார்.

   ஆனால் சசிகலா இப்போது சிறை வாழ்க்கைக்கு மிகவும் பழகி விட்டாராம். முன்பு போன்று எந்த வசதியும் எதிர்பார்ப்பதில்லை. சிறையில் கொடுக்கும் உணவுகளை பெரும்பாலும் எடுத்துக்கொள்கிறார். உடல் சரியில்லை என்றால் மட்டும் வெளி சாப்பாடு வாங்கிக்கொள்கிறாராம்.

   இப்போது சிறையில் சசிகலா கன்னடம் படிக்கிறார் என்பதுதான் புதிய தகவல். சிறை வார்டன்கள் கன்னடத்தில் பேசுவது புரியவில்லை என்பதால் கன்னடம் கற்கத் தொடங்கிவிட்டாராம். குறிப்பாக தன்னை யாராவது திட்டுகிறார்களா என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கன்னடம் பயில்கிறாராம். இதுதவிர கம்ப்யூட்டர் வகுப்புக்கும் போகிறாராம். சிறையில் இருந்து வெளியே வரும்போது சசிகலா கம்ப்யூட்டர் புலியாகத்தான் வருவார் என்கிறார்கள்.



சசிகலா தண்டனைக் கைதி என்பதால் ஏதாவது வேலை செய்தே ஆகவேண்டும். அதனால் அவர் இப்போது காளான் வளர்ப்பில் ஈடுபடுகிறாராம். அதுபோலவே சிறை தோட்டத்தில் காய் வளர்ப்பிலும் ஈடுபடுகிறாராம். இதனால் மனசுக்கு அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறது என்று சந்தோஷப்படுகிறாராம். அவரை வேலை செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், அவரே பொழுது போகவேண்டும் என்பதற்காக வேலை செய்கிறார் என்று சிறை வார்டன்களே புல்லரிக்கிறார்கள்.

சிறையில் இப்போது சின்ன எம்.ஜி.ஆர். சுதாகரன் தமிழ் கற்று வருகிறார் என்பதுதான் புதிய தகவல். தமிழ் பேசத் தெரிந்தாலும், அவருக்கு சரிவர எழுதத்தெரியாதாம். அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்து, ஏதோ சந்தர்ப்ப சூழலில் முதல் அமைச்சர் பதவி ஏற்கவேண்டிய சூழல் வந்தால், தமிழ் தேவைப்படும் என்று உணர்ந்து தமிழ் படிக்கிறாராம்.

   பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா ஓய்வு நேரங்களில் என்ன செய்துவருகிறார் என்று தெரியுமா?