அழகிரி சொன்னால் பலிக்குமே! தோல்வி பயத்தில் ஸ்டாலின்!

இதுவரை அழகிரி சொன்ன இரண்டு ஆருடம் பலித்திருப்பதால், இப்போதும் பலித்துவிடுமே என்று அச்சத்தில் இருக்கிறார் ஸ்டாலின்


கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பலத்த தோல்வியை சந்திக்கும் என்று அழகிரி திருவாய் மலர்ந்தார். அப்படியே நடந்தது. அதன்பிறகு ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலின் போதும் தி.மு.க. தோல்வி அடையும் என்று சொன்னார். அதுவும் பலித்தது.

இந்த நிலையில்தான் இன்று பத்திரிகையாளர்களை போகிறபோக்கில் சந்தித்த அழகிரி, ‘காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தாலும் தி.மு.க. வெற்றிபெற முடியாது’ என்று கமென்ட் செய்திருக்கிறார். இதுதான் இப்போது தி.மு.க.வில் செம ஹாட்.

மக்களின் மனநிலையை அறிந்தவர் அழகிரி. அதேபோல் தொண்டர்களை எப்படி வேலை வாங்கவேண்டும் என்பதும் அழகிரிக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் தென்மண்டல தளபதியாக வெற்றிக்கொடி நாட்டினார். இப்போது மக்கள் மனநிலையை நன்கு அறிந்து அதைத்தான் சொல்லியிருக்கிறார் என்று அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதேநேரம், அழகிரியை உடன் சேர்த்துக்கொண்டால் நிச்சயம் நிலைமை மாறிவிடும். அதனால் அவர் விண்ணப்பத்தை ஏற்று, உடனே கட்சியில் சேர்த்துக்கொண்டு பதவி தரவேண்டும், தி.மு.க. பெருவெற்றி அடையும் என்று வேண்டுகோள் வைக்கிறார்கள்.

அழகிரி இந்தத் தேர்தலில் நிற்கிறாரோ இல்லையோ வாயை மூடிக்கொண்டு இருந்தாலே போதும். அதனால் எப்படியாவது அழகிரியை அமைதியாக இருக்கச்சொல்லுங்கள் என்று தி.மு.க.வினர் கனிமொழியிடம் கேட்டு வருகிறார்கள்.

இதை எப்படி ஸ்டாலினிடம் சொல்வது என்று புரியாமல் கனிமொழி மட்டுமின்றி சீனியர் தலைவர்களே மிரள்கிறார்கள்.  ஏனென்றால் அழகிரி என்ற பெயரைக் கேட்டாலே ஸ்டாலின் கோபமாகிறார், சபரீசன் எரிந்துவிழுகிறார் என்பதால் யாரும் எதுவும் பேசாமல் நழுவுகிறார்கள்.

ஆனால், அழகிரியின் விமர்சனம் ஸ்டாலினை மிரட்டியுள்ளதாம். அவர் சொன்னா பலிக்குமே என்று அச்சப்படுகிறாராம்.

மீசைக்கும் ஆசை, கூலுக்கும் ஆசைன்னா எப்படி தலைவரே...