தொகுதி மறு வரையறை பணிகளை முடிக்காமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது! உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

தொகுதி மறு வரையறை பணிகளை நடத்தி முடிக்காமல் உள்ளாட்சி தேர்தலை தமிழகத்தில் நடத்த கூடாது என திமுக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.


உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான தேதிகள் டிசம்பர் மாதம் 13ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறி இருந்தது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 

இந்த மனுவில் தொகுதி மறு வரையறை பணிகளை முடிக்காமல் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே தொகுதி வரையறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்னும் தீர்ப்பு வெளியாகவில்லை. ஆகையால் தொகுதி மறு வரையறை பணிகள் முடிந்த பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் அளிக்கப்பட்ட மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.