குழந்தை கண்ணனுக்கு அதிகாலை 2 மணிக்கு பால் கொடுக்கும் பூஜை..! தூங்கும் கண்ணனின் அழகை தரிசிக்க வாருங்கள்

கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் நள்ளிரவில் ஒரு பூஜை நடைபெறும்.


அர்ச்சகர் அவசர அவசரமாக இரவு இரண்டு மணிக்கு வருவார். கோவில் கதவுகளை திறந்து அமைதியாக கிருஷ்ணனுக்கு பாலை மட்டுமே வைத்தியம் செய்வார். விரைவில் குழந்தை கண்ணன் பசியுடன் இருக்கக்கூடாது என்பதால் இந்த பூஜை. இதற்கு அவசர பூஜை என்று பெயர்.

நாகர்கோவில் அருகே உள்ள அழகிய பாண்டியபுரம் அழகியநம்பி கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார். இந்தக் கண்ணன் உறங்கிக் கொண்டிருப்பதாக சொல்லப்படுவதால் தூக்கம் கலையாமல் இருக்க புல்லாங்குழலின் மெல்லிய இசை மட்டும் பூஜை நடக்கும் போது ஒலிக்கும். தவில் நாதஸ்வரம் போன்ற வாத்தியங்கள் வாசிக்கப் படுவதில்லை.

குருவாயூர் கோவில் குடிகொண்டுள்ள உன்னிகிருஷ்ணன் பாதாள அஞ்சனம் என்ற மூலிகையால் ஆனவர்.

துவாரகையில் உள்ள கண்ணன் கோயிலை ஜகத்மந்திர் என்று அழைக்கிறார்கள். இங்கு மூலஸ்தானத்தில் மேற்கு நோக்கி அருள்புரியும் கிருஷ்ணர் நான்கு திருக்கரங்களுடன் வெள்ளி மஞ்சத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

பீகாரில் உள்ள ஸ்ரீ கதாதரர் கோயிலின் முன் உள்ள பெரிய ஆலமரத்தின் கீழ் பகவான் கிருஷ்ணர் குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்துக்கொண்டு வலது கால் கட்டை விரலை வாயில் வைத்துக்கொண்டிருக்கும் சிறிய திருவுருவத்தை தரிசிக்கலாம்

கர்நாடக மாநிலம் தொட்ட மலரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் நவநீத கிருஷ்ணன் கோவிலில் நவநீதகிருஷ்ணனாக தவழும் நிலையில் காட்சி அளிப்பதைக் காணலாம்.  இங்கு குழந்தை பேரு வேண்டினால் குழந்தை பிறப்பது நிச்சயம்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியன்று ஆண்கள் புலி வேடம் அணிந்து ஊர் முழுவதும் நடனமாடிக் கொண்டு வருவது சிறப்பு.

ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா கோவிலில் எழுந்தருளியுள்ள கிருஷ்ணரான ஸ்ரீநாத்ஜிக்கு வெண்ணெய், பாதாம், பிஸ்தா பருப்புகள், இனிப்பு பூரிகள், மோர்க்குழம்பு நெய்வேத்தியம் செய்ய வேண்டும் என்று ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்டுள்ளதாம். ஏனெனில் கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளாம் அவை.

சேலம் பேளூர் தலத்தில் உள்ள அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலன் கோவில் மூலவர் கண்ணன், எட்டுக் கரங்களுடன் காட்சி தருகிறார். அவரது வலது கன்னம் சொர சொரப்புடனும், இடது கன்னம் வழுவழுப்பாகவும் இருப்பது சிறப்பு.