12 ராசிக்காரர்கள் வணங்கவேண்டிய 12 விநாயகர்கள்..! விநாயகர் சதுர்த்தி தினத்தில் வழிபட்டு அருள் பெறுங்கள்!

நாம் எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் வழிபடுவது விநாயகரைத்தான். அவர் தான் முழுமுதற் கடவுளாவார். அவரவர் ராசிக்குரிய விநாயகப்பெருமானை வழிபட்டு வாழ்வில் நன்மைகளை அடைவோம்.


மேஷம் - :மனோதைரியம் மிக்கவர் நீங்கள். செவ்வாயின் ஆதிக்கத்தை பெற்ற நீங்கள் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். நீங்கள் வழிபட வேண்டியவர் வீர கணபதி. 

ரிஷபம் :- நீங்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்று அம்பிகையின் பரிபூரண அருளுக்கு பாத்திரமானவர்கள். நீங்கள் வழிபட வேண்டியவர் ராஜ ராஜேஸ்வரியின் அம்சத்தில் உள்ள ஸ்ரீவித்யா கணபதி. 

மிதுனம் -பல்வேறு திறமையை உடைய உங்களின் திறமைக்கும், வளர்ச்சிக்கும் மறைமுகமாக வந்து சேருகின்ற தாக்குதல்களிலிருந்து விடுபட நீங்கள் வழிபட வேண்டியவர் லட்சுமி கணபதி. 

கடகம் :-ஒரு நேரம் சாந்தம், ஒரு நேரம் கோபம் என முகத்தில் நவரசத்தையும் காட்டுபவர். நீங்கள் அமைதியான முறையில் அடுத்தவர்களை வழிநடத்தும் திறன் மிக்கவர்கள். நீங்கள் வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி. 

சிம்மம் - இயற்கையில் தைரிய குணமிக்க உங்களுக்கு என்றுமே வெற்றித்திருமகள் துணை நிற்பாள். அசாத்தியமான மனவலிமையுடன் என்றென்றும் வெற்றியினை ருசித்து வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் விஜய கணபதி. 

கன்னி - மென்மையான குணத்தினை உடையவர் நீங்கள். உங்களின் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்படும்போது உங்களை வெல்ல எவராலும் இயலாது. உங்களின் வழிபாட்டிற்குரியவர் மோகன கணபதி. 

துலாம் - அயராத உழைப்பினை உடைய நீங்கள், மேற்கொண்ட லட்சியத்தினை அடையும் வரை ஓயமாட்டீர்கள். உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் வெற்றி கணபதி. 

விருச்சகம் - மிகவும் சுறுசுறுப்பான குணத்தினை உடைய நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்காது சதா பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சக்தி கணபதி. 

தனுசு - குருபகவானின் ஆதிக்கத்தை பெற்ற நீங்கள் நேர்மையை மிகவும் நேசிப்பவர்கள். தர்ம நெறியில் செல்வதால் அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்து வரும் உங்களுக்கு சங்கடஹர கணபதியே வழிபாட்டிற்கு உகந்தவர். 

மகரம் - தியாக உள்ளம் கொண்டவர் நீங்கள். உங்கள் மனதினை அடக்கியாள கற்றுக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். நீங்கள் வழிபட வேண்டியவர் யோக கணபதி. 

கும்பம் - புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொள்ளும் தனித்திறமை பெற்றவர் நீங்கள். அனுபவ அறிவின் மூலமாக அடுத்தவர்களை அடக்கியாள நினைப்பீர்கள். நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி. 

மீனம் - கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணத்தினை உடையவர்கள் நீங்கள். தான் நினைத்ததை அடைந்துவிட வேண்டும் என்ற பிடிவாத குணத்தினை உடையவர்கள். உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் பால கணபதி.