தோல்வியை ஒப்புக்கொண்டாரா மோடி..? மக்களை இனி காபாற்றுவது யாரோ..?

மோடியின் உரை, தோல்வியின் ஒப்புதல் வாக்குமூலம் என்கிறது ஒரு பதிவு.


அதாவது அரசு செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிட்டது, இனி மக்கள்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவித்து இருக்கிறார். அப்படியென்றால், தான் ஒரு நல்ல நிர்வாகி இல்லை என்று ஒப்புக்கொள்கிறாரா என்று கேட்கிறது இந்த பதிவு.

இந்தியா வல்லரசு நாடு, இந்தியா ஒளிர்கிறது, இந்தியா வளர்கிறது என்கிற அனைத்தும் பொய்தான் என்பதை ஒத்துக்கொண்ட மோடி, தான் சிறந்த நிர்வாகி அல்ல என்பதையும், தான் யாரையும் கட்டுப்படுத்த இயலாத பலவீனமானவர்தான் என்பதையும் சேர்த்தே ஒத்துக்கொண்டார். ஆம், அவரால் தனியார் மருத்துவத்துறையை சேவை மனபான்மையோடு களத்தில் இறக்கமுடியவில்லை.

பொதுசுகாதார துறைக்கு போதுமான நிதி ஒதுக்காமல் மருத்துவத்துறையில் தனியாரை வளர்த்துவிடுகிறவர்களுக்கு, நாடு ஒரு பேரழிவை சந்திக்கும் போது கூட அந்த தனியார் துறையை கட்டுப்படுத்த முடியாமலிருப்பது எவ்வளவு மோசமான கையாலாகாத்தனம்?

அமெரிக்காவும் சீனாவும் வளர்ந்த நாடுகள் பலவும் திணறிக்கொண்டிருக்கும் போது இந்தியா ஏதாவது மந்திரம் செய்திருக்க வேண்டுமென்று நாம் சொல்லவில்லை. அதேபோல, கியூபா மாதிரி பாதிப்படைந்த நாடுகளுக்குப் போய் எல்லாரையும் காப்பாற்றுங்கள் என்றும் சொல்லவில்லை. ஆனால் நாடெங்கும் சுற்றிவருகிற மருத்துவ தன்னார்வ குழுக்கள் உருவாகவில்லையே.

மருத்துவ குழுக்களுக்கு உதவுகிற வகையில் பாதுகாப்பு படைகளை ஒருங்கிணைக்கவில்லையே. கேவலம் களத்தில் நிற்கிற மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் கூட இல்லையே. நமது நாட்டைப் பொறுத்தவரை மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் ஒரு நாளைக்கு 5 லட்சம் வேண்டுமாம். ஆனால் இந்திய அரசு 3 மாதத்திற்கு சேர்த்து வெறும் 7 1/2 லட்சத்திற்கு திட்டமிடுகிறதாம். 

இதைவிட இன்னும் மோசமான செய்தி என்னவென்றால், கொரோனா ஆபத்து சீனாவை கடந்த டிசம்பரிலேயே ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது. இதன் ஆபத்தை உணர்ந்த நமது மத்திய அரசிலுள்ள வெளிநாடுகளுக்கான வர்த்தகத்துறை அதிகாரி, 31/1/20 - இல் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்திருக்கிறார். ஆனால் மோடி அரசு 8/2/20 - இல் அந்த தடையை நீக்கி இருக்கிறவற்றையெல்லாம் வெளிநாடுகளுக்கு விற்று தீர்த்திருக்கிறது.

இதன் பிறகு உலகம் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கி, இத்தாலியில் உயிர் பலிகள் அதிகரிக்கவும் தொடங்குகிறது. இந்த நிலையிலும் 25/2 /20 - இல் மேலும் 8 உபகரணங்களுக்கு இருந்த தடையை நீக்கியுள்ளது மோடி அரசு. இந்த கொடுமையை என்னவென்று சொல்ல?

எனக்கு ஒன்றுதான் உறுத்துகிறது. மோடி எப்போதும் மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கையை விரிப்பது ஏன்? என்பதுதான் அந்த உறுத்தல். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமும் மக்களிடமிருந்து அனைத்தையும் பறித்துவிட்டு அம்போவென விட்டார். இப்போதும் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வீட்டில் முடங்குவது தவிர வேறு வழியில்லை என்று கையை விரித்துவிட்டார்.

நமக்கு 21 நாட்கள் வீட்டில் முடங்குவதில் பிரச்சினை இல்லை. மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் இந்த காலத்தில், நோயை பரவாமல் தடுக்கவும், ஒழிக்கவும் அரசு என்ன செய்யும்? யார் மூலம் செய்யும்? என்ற நம்பிக்கையை அளிக்காமல் இருப்பதுதான் பிரச்சினை.

இதையெல்லாம் விட இன்னொரு பெரிய பிரச்சினை காத்திருக்கிறது. எல்லா கொடிய நோய்களும் மாத கணக்காக மக்களை முடக்குவதன் மூலமும், அதனால் விளையும் பொருளாதார நெருக்கடியின் மூலமும் அடுத்து வருவது பஞ்சம். அப்படி ஒரு பஞ்சம் வருமானால்? இப்போது நோய்க்கு தப்பி பிழைப்பவர்கள் கூட அடுத்து வரும் பசியில் செத்துதான் தீரணும் என்கிறது அந்தப் பதிவு.

இந்தப் பதிவுக்கு பதில் சொல்லவேண்டிய பா.ஜ.க.வினர் யாரும், எந்தப் பதிலும் சொல்லவே இல்லை, ஏனாம்..?