ஆண்டாள் இடது கையில் கிளி வைத்திருப்பதன் காரணம் என்ன தெரியுமா?

ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம்.


ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும்? என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கையில் வைப்பதற்காக தினமும் இலைகளால் கிளி செய்யப்படுகிறது. மாலையில் சாயரட்சை பூஜையின்போது இந்த கிளி ஆண்டாளுக்கு வைக்கப்படுகிறது. ஆண்டாள் மறுநாள் காலை வரையில் கையில் கிளியுடன் இருக்கிறாள்.

மரச்சீனி கிழங்கை 'ஏழிலை கிழங்கு' என்பர். மரச்சீனியின் இலைக் கொத்தில் ஏழு இலைகள் இருக்கும். இந்த இலையைப் பயன்படுத்தியே ஆண்டாளின் கையிலுள்ள கிளி செய்யப்படுகிறது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் உள்ள நந்தவனத்தில் மரச்சீனி செடிகள் வளர்க்கப்படுகின்றன.

இதன் இலையில் கிளியின் உடலும், மாதுளை மொட்டால் கிளி மூக்கும், நந்தியாவட்டையால் சிறகும், காக்கா பொன்னால் கண்களும் தயாராகிறது. தினமும் புதிய கிளி ஒன்று ஆண்டாளின் கையில் வைக்கப்பட்டு, மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படும். இதை வீட்டில் வைத்து வழிபட்டால் கன்னியருக்கு திருமண யோகம் உண்டாகும்.