விபத்தில் காலை இழந்த தந்தை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட தாயை வளர்த்து வரும் சிறுமிக்கு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் வீடு கட்டிக் கொடுத்து நெகிழச் செய்துள்ளார்.
நிர்கதியான 13 வயது சிறுமிக்கு சொந்த செலவில் வீடு! நெகிழச் செய்த ஓ.பி.எஸ்!
தேனி மாவட்டம் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி
அனிதா. இவரது தாய் மன நிலை பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம்
நடந்த விபத்தில் அனிதாவின் தந்தை கால்களை இழந்து படுத்த படுக்கையாகிவிட்டார். இதன்
பிறகு அனிதா சிறு சிறு வீட்டு வேலைகளை பார்த்து தனது தாய் மற்றும் தந்தையை பராமரித்து
வந்தார். அதே சமயம் பள்ளிக்கும் சென்று வந்து தனது படிப்பை தொடர்ந்தார்.
ஒரு கட்டத்தில் பெற்றோரை
கவனிக்க வேண்டும் என்றால் படிப்பை நிறுத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு அனிதா தள்ளப்பட்டார்.
மனநிலை பாதிக்கப்பட்ட தாய், விபத்தில் காயம் அடைந்த தந்தை ஆகியோரை எப்படி பராமரிப்பது?
எப்படி படிப்பை தொடர்வது? என சிரமப்பட்டு வந்த அனிதா குறித்த செய்தி உடனடியாக ஊடகங்கள்
மூலம் வெளியானது. இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் அப்போதே அனிதாவை அழைத்து
நிதி உதவி வழங்கினார்.
மேலும் அனிதா தனது
குடும்பத்துடன் வசிக்க அனைத்து வசதிகளுடனும் வீடு கட்டித்தருவதாகவும் ஓ.பி.எஸ் கடந்த
செப்டம்பர் மாதம் வாக்குறுதி அளித்தார். இதனை தொடர்ந்து அன்றே அங்கு வீடு கட்டும் பணி
துவங்கியது. சுமார் நான்கு லட்சம் ரூபாய் செலவில் அனிதாவிற்கு புதிய வீட்டை ஓ.பி.எஸ்
கட்டினார். அந்த வீட்டின் சாவியை ஓ.பி.எஸ் இன்று அனிதாவிடம் வழங்கினார். அதனை நெகிழ்ச்சியோடு
பெற்றுக் கொண்டு தான் தற்போது கல்வி கற்கவும், தனது பெற்றோரை கவனித்துக் கொள்ளவும்
பேருதவி செய்தது ஓ.பி.எஸ் தான் என்று கூறினார்.
மேலும் தன்னுடைய
நிலையை அறிந்து பலரும் பொருள் உதவி செய்ததாகவும் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும்
அனி தெரிவித்தார். தொடர்ந்து நன்றாக படித்து பெரிய வேலைக்கு சென்று ஏழைகளுக்கு உதவுவதே
தனது லட்சிம் என்றும் அனிதா கூறினார். இதனிடையே பெற்றோரை வளர்த்து வரும் சிறுமிக்கு
ஓ.பி.எஸ் நிதி உதவி செய்ததோடு சொந்த செலவில் வீடும் கட்டிக் கொடுத்திருப்பது அவரது
கட்சியினரை மட்டும் அல்லாமல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
ஓ.பி.எஸ் கட்டிக்
கொடுத்த வீட்டில் அனிதா தனது தாய் மற்றும் தந்தையுடன் மகிழ்ச்சியுடன் குடியேறி உள்ளார்.